கோளறு பதிகம் – மூலமும் உமாஸ்ரீதாஸன் உரையும்
அறிமுகம்
நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகள் பிராரப்த கர்மம் என அழைக்கப்படுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.
நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.
எந்தக் கர்மப் பகுதியை எப்படி மாற்ற வேண்டும் என்ற அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை, ஈசுவரியை முன்னிட்டுக்கொண்டு நாம் சரணடைந்தால், மிகவும் சிக்கலான இந்த வேலையைக் கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வார்.
உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ் மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்தக் கோளறு பதிகம். இதனை நாம் பாராயணம் செய்யும்போது, திருஞான சம்பந்தரை முன்னிட்டுக்கொண்டு, அம்மையப்பரான உமாபதியின் திருவடிகளில் மிக எளிதாக சரணமடையும் படி, ஆளுடைய பிள்ளையான சம்பந்தர் அவ்வளவு அழகாகப் பாடியுள்ளார்.
கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக நமக்கு உள்ள ஆறாத வருத்தமும், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக நாம் கருதும் நிகழ்வுகள் தொடர்பாக நமக்குள்ள மிதமிஞ்சிய பதற்றமும், இவ்விரண்டுக்கும் காரணமாக நாம் நினைக்கும் மனிதர்கள் மீது நமக்குள்ள ஆழ்ந்த வெறுப்பும் ஆகிய இம்மூன்று கூறுகளைக் கொண்ட எதிர்மறை ஆற்றலானது, நம் உடல் மனம் நெஞ்சத்தில் நிரம்பி வழியும் வரையில், நாம் விரும்பும் வாழ்வு அமைய வாய்ப்பில்லை.
கோளறு பதிக தினசரி பாராயணத்தால், மேற்சொன்ன எதிர்மறை ஆற்றல் சிவப்பரஞ்சுடரால் அழிக்கப் பெற்று, நாம் விரும்பும் வாழ்வு அமைகிறது என்பதுதான் இந்தப் பதிகத்தின் ஆன்மீகப் பின்புலம்.
பதிகத்தின் திரண்ட கருத்து
மூலமும் உரையும்
1. முதல் பாசுரம் – கோள்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
வேயுறு தோளிபங்கன் விடம்உண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்புதன் வியாழன்வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – மூங்கில் போன்ற வலுவான தோள்களை உடைய உமாதேவியைத் தன் இடபாகத்தில் கொண்டவரும், அடியவர்களின் பாவங்களாகிய விஷத்தை அருந்திய கருத்த தொண்டையை உடையவரும், குற்றமற்ற சந்திரனையும் கங்கையாற்றையும் தன் முடிமேல் கொண்டவரும், மகிழ்வுடன் வீணை மீட்டுபவருமான சிவப்பரஞ்சுடர், என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களும் குற்றமற்ற நலத்தையே எனக்கு அளிப்பது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே நன்மை பயக்கட்டும்.
2. இரண்டாம் பாசுரம் – நாள்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
என்பொடு கொம்பொ டாமைஇவை மார்பிலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு இவற்றைத் திருமார்பிலும், பொன் போல் மின்னும் மகரந்தம் பொதிந்த ஊமத்தை மலர் மாலை, கங்கை நீர் இவற்றைத் திருமுடியிலும் அணிந்து கொண்டு, நந்தி எம்பெருமான் மீதேறி, உமாதேவியாருடன் எழுந்தருளிய சிவப்பரஞ்சுடர், என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், அசுவினி முதலாக எண்ண வரும், ஒன்பதாவது நட்சத்திரமான ஆயில்யம், ஒன்பதோடு ஒன்று பத்தாவது நட்சத்திரமான மகம், ஒன்பதோடு ஏழு பதினாறாவது நட்சத்திரமான விசாகம், பதினெட்டாவது நட்சத்திரமான கேட்டை, ஆறாவது நட்சத்திரமான திருவாதிரை என இந்த நட்சத்திரங்கள் கூடி வரும் நன்மை தராத நாட்களும் கூட எனக்கு அன்புடன் நலத்தைத் தருவது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே நன்மை பயக்கட்டும்.
3. மூன்றாம் பாசுரம் – தெய்வங்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமிதிசை
தெய்வ மான பலவும்
அறநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – அழகு வளரும் பவளம் போலும் சிவந்த திருமேனியில் ஒளிரும் வெண்திருநீறும், திருமுடியில் அழகாக மலரந்த கொன்றை மலரும் பிறைச் சந்திரனும் அணிந்துகொண்டு, நந்தி எம்பெருமான் மீதேறி, உமாதேவியாருடன் எழுந்தருளிய சிவப்பரஞ்சுடர், என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், திருமகளும் துர்க்காதேவியும் வெற்றிமகளும் பூதேவியும் திசைத் தெய்வங்களும் எனக்கு அறந் தவறாத வழியில் பலவித செல்வங்களை வழங்குவது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே வழங்கட்டும்.
4. நான்காம் பாசுரம் – உயிர்க்கொல்லி நோய்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறைஓது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலனங்கி நமனொடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – ஆலமரத்தின் கீழ் இருந்து சனகாதி முனிவர் நால்வருக்கு வேதத்தின் பொருளை மௌனமாக உபதேசித்து அருளிய பரமேசுவரனும், திருமுடி மீது கங்கை ஆற்றையும் கொன்றை மாலையையும் அணிந்து கொண்டு, பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவியாருடன் எழுந்தருளிய சிவப்பரஞ்சுடர், என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், நெருப்பைப் போல கொதிக்கும் காலன், எமன், எம தூதர் என்று இறப்பை வருவிக்கும் கொடிய நோய்களைத் தருவிக்கும் இவர்களும் கூட, குணம் மிகுந்தவராக, எனக்கு நன்மையானவற்றைச் செய்வது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே செய்யட்டும்.
5. ஐந்தாம் பாசுரம் – பூதங்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
நஞ்சணி கண்ட னெந்தை மடவாள் தனோடு
விடைஏறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும்இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – அடர்ந்து செறிந்த வன்னி இலைகளையும் கொன்றை மலர்களையும் திருமுடிக்கு அணியாகக் கொள்வது போலவே, அடியார்களின் பாவங்களாகிய நஞ்சை அமுதாக உண்ணுவதோடு அதனைத் தன் கழுத்துக்கு அணிகலனாகவும் கொண்டு மகிழும் பரமேசுவரனாகிய எங்கள் தந்தை, உமாதேவியாருடன் எழுந்தருளி, என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், மிக்க சினத்தையுடைய அசுரர்களும், பெரும் இடியும், மின்னலும், பற்பல பூதங்களும் அஞ்சி, எனக்கு நன்மையானவற்றைச் செய்வது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே செய்யட்டும்.
6. ஆறாம் பாசுரம் – விலங்குகள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
வாள்வரி அதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநா கமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – ஒளியும் வரியும் கொண்ட புலியைக் கொன்று அதனுடைய தோலை வரிந்து கட்டும் கோவண ஆடையாக அணிபவரும், அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆறு ஆகியவற்றை திருமுடியில் அணிபவரும் ஆகிய சிவப்பரஞ்சுடர், உமாதேவியாருடன் எழுந்தருளி, என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், வலிய விலங்காகிய புலி, கொலை மிரட்டலுடன் வரும் யானை, பன்றி, கொடிய நாகம், கரடி, கம்பீரமான சிங்கம் முதலான விலங்குகள் எனக்கு நன்மையானவற்றைச் செய்வது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே செய்யட்டும்.
7. ஏழாம் பாசுரம் – துன்பம் தரும் நோய்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – ஞானப்பால் வழங்கிய இளமையான செப்பைப் போன்ற மார்பகங்களை உடையவரும் அடியவர்களின் கொடும்பாவங்களையும் பொறுத்தருளும் நன்மையும் செய்யும் அம்மையுமாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவராகவும், தன்னைச் சரணமடைந்த சந்திரனையும் கங்கை நதியையும் திருமுடி மீது அணிந்தவராகவும், நந்தி எம்பெருமான் மீதேறி எழுந்தருளிய சிவப்பரஞ்சுடர், என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், வெப்பம், குளிர், வாதம், பித்தம் முதலிய உடலியல் தத்துவங்கள் இயல்பைத் தாண்டி நின்று செய்யும் வினைகளால், என் உடல் நோயுற்று வருந்தா வண்ணம் எனக்கு நலமே செய்வனவாய் அமைவது போலே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே நலமே செய்வனவாய் அமையட்டும்.
8. எட்டாம் பாசுரம் – தீப்புலன்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – அன்று மன்மதன் சாம்பலாகும் படியாக நெற்றிக்கண்ணை விழித்தவரும், ஒளி பொருந்திய சந்திரனையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடியில் அணிந்து வருபவருமாகிய சிவப்பரஞ்சுடர், உமாதேவியாருடன் நந்தி எம்பெருமான் மீதேறி எழுந்தருளி, என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், ஏழ்கடல் சூழ்ந்த இலங்கை மன்னன் ராவணன் தன் ஐந்து பொறிகளும் ஐந்து புலன்களும் கொந்தளித்து அறிவழிந்து, பூதேவித் தாயாரின் அவதாரமான சீதா தேவியைச் சிறைப்பிடித்து ராமபிரானால் அழிவுற்றது போல அல்லாமல், ஆழமான கடல் மிகவும் அமைதியாக இருப்பது போல என் பொறிகளும் புலன்களும் அமைதி காத்து எனக்கு நன்மை செய்வது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவர்களுடைய பொறிகளும் புலன்களும் அவ்வாறே அமைதி பொருந்தி நலமே செய்வனவாய் அமையட்டும்.
9. ஒன்பதாம் பாசுரம் – தேவர்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
பலபல வேடமாகும் பரன்நாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – எல்லோருடைய ஆத்மாவுக்கும் ஆத்மாவாக விளங்கும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அவர்களை எல்லாம் இயக்கும் ஈசுவரனும், கங்கையும் எருக்க மலரும் திருமுடியில் அணிந்து வரும் பரமேசுவரனும், நந்தி எம்பெருமான் மீதேறி எழுந்தருளி, என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், பிரம்ம தேவர், திருமால், வேதங்கள், தேவர்கள், நேரங்கள், கடல், மலை என அனைவரும் அனைத்தும் எனக்கு நல்லனவாக அமைவது போலவே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவாக அமையட்டும்.
10. பத்தாம் பாசுரம் – ஈசுவரன் திருநீறு அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரை – அர்ச்சுனனுக்கு அருள்புரிய வேண்டி, பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலை உடைய உமாதேவியுடன் வேடராகச் சென்றவரும், திருமுடியில் ஊமத்தை மலர், சந்திரன், நாகம் ஆகியவற்றை அணிகலன்களாக அணிந்து கொண்டவரும் ஆகிய சிவப்பரஞ்சுடர், என் நெஞ்சில் புகுந்து நிலையாகக் குடியிருக்கும் காரணத்தால், அத்தலைவனின் திருநீறு, புத்த சமண மதத்தைப் பின்பற்றுபவர்களை வாதில் தோற்று ஓடச் செய்து, எனக்கு நலமே செய்வது போலே, என்னை முன்னிட்டுக்கொண்டு உமாபதியை வணங்கும் அடியார்களுக்கும் அவ்வாறே நலமே செய்யட்டும்.
பலன் சொல்லும் பாசுரம் – அடியார்கள் இம்மையில் கோளும் நாளும் பிறவும் நலியாதே, மறுமையில் திருக்கைலாயப் பேறு பெறுவர்
தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல்
துன்னிவளர் செம்பொன்எங்கும் திகழ
நான்முகன் ஆதிஆய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலைஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
உரை – தேன் பொருந்திய சோலைகளைக் கொண்டதும், கரும்பும் நெல்லும் விளைந்து நிறைந்துள்ளதும், பெருகும் பொற்குவியலால் நிறைந்து வளப்பமாக இருப்பதும், ஆதியில் பிரம்ம தேவரால் நிர்மாணிக்கப்பட்டதுமான பிரம்மாபுரம் என்ற சீர்காழியில் பிறந்து, வேதம் சொன்ன வழியில் உமாதேவியைக் காணும் ஞானமும் சிவப்பரஞ்சுடரைக் காணும் விஞ்ஞானமும் ஒருங்கே பெற்று, அவ்விருவரையும் எப்போதும் தியானித்திருப்பவருமாகிய திருஞானசம்பந்தர், வினைப் பயனால் வந்து சேரும் கோளும் நாளும் அடியவர்களை வருத்தாத வண்ணம் கட்டமைத்த சொல்மாலையாகிய இப்பதிகத்தை பாராயணம் செயும் அடியவர்கள் திருக்கைலாயப் பேறு பெறுவர்; இது ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தரின் ஆணையாகும்.
Thank u very much for elaborated meaning.We r all blessed.
ReplyDeleteThankyou so much🙏
ReplyDelete