Saturday, May 18, 2019

Chapter 03 of 16 - D2H Story



*அத்தியாயம் 03*


நான் ராமன் வீட்டுக்குச் சென்றபோது அவர் வீட்டுக்கு வெளியே பதட்டமாக நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் விரைந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டார். அவர் நிறைய அழுதிருக்க வேண்டும். அவர் கண்களில் தூக்கத்தின் சாயலே தெரியவில்லை.

“விக்னேஷ் ...” அதற்குமேல் வார்த்தைகள் எழும்பவில்லை.

“கீதா பேசினா. அனிதா எங்க?”

ராமன் என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

“நாங்க யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல. எங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது?” கிச்சனிலிருந்து சுவேதாவின் விசும்பலைக் கேட்க முடிந்தது.

“அழாதீங்க. எல்லாம் சீக்கிரமே சரியாப் போயிடும்” கீதாவின் ஆறுதல் வார்த்தைகள் தொடர்ந்தன.



நாங்கள் அனிதாவின் ரூமிற்குச் சென்றோம். அனிதா தன் கைகளை முழங்கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு சுருண்டு கட்டிலில் படுத்திருந்தாள். சிவப்புக் கலர் நைட்டி அணிந்திருந்தாள். அது போன வருடம் இருவரும் ஷாப்பிங் போயிருந்தபோது அருகிலிருந்த கடை ஒன்றில் கீதா வாங்கிக் கொடுத்தது.

அவள் எங்களைப் பார்த்துக்கொண்டு பக்கவாட்டில் படுத்திருந்தாள். கண்கள் மூடியிருந்தன. ஆனால் அவள் தூங்கவில்லை என்று எனக்குப் பட்டது. கண்களுக்குக் கீழே கன்னம் சற்று ஈரமாக இருந்தது. அவள் பொன்னிறக் கழுத்தைச் சுற்றித் தெரிந்த நீண்ட சிவந்த தடிப்பு, ஒரு மணி நேரம் முன்னதாக அவள் செய்ய முயன்றதைச் சொல்லாமல் சொன்னது. என்னால் ஸ்டெடியாக நிற்க முடியவில்லை. அறையிலிருந்த ஜன்னலுக்குச் சென்று அதைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டேன். வயிறு பந்துபோல் சுருண்டுகொண்டது. இதயம் கனத்தது. கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது.

‘விக்னேஷ் ... கனட்ரோல் பண்ணிக்க. ஒரு பெரிய சுமையைத் தாங்கவேண்டியிருக்கிறது. இந்தக் குடும்பத்தில் வேறு யாராலும் அந்தப் பொறுப்பைத் தாங்கமுடியாது. அனிதா உன் கண்ணில் நீர் வழிவதைப் பார்த்தால், அவள் மீண்டும் விரக்தியடைந்துவிடுவாள். கண்ட்ரோல் பண்ணிக்க.’ இந்த சுயதேற்றுதல் எந்த அளவுக்கு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.

இறைஞானம் என்னுடைய இதயத்தை மிருதுவாகவும் அதே சமயத்தில் வலுவானதாகவும் ஆக்கியிருந்தது. எவ்வளவு வலுவாக என்றால், ஒரு நொடிக்குள்ளாக என் புத்தியையும் உடலையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் அளவுக்கு.

இந்தச் சிறு பெண் அனுபவித்த வேதனை என் நெஞ்சைப் பிளந்துவிடும்போல இருந்தது. அவளிடம் குரல் நடுங்காமல் என்னால் பேசமுடியுமா தெரியவில்லை. அப்படியே ஒரு வேளை பேச முடிந்தாலும், எப்படி ...

“அனிதா,” ராமன் மெல்லிய குரலில் மகளை எழுப்பினார். எனக்கு ஜன்னலிலிருந்து திரும்ப தைரியம் வரவில்லை. அனிதா பதில் எதுவும் சொல்லவில்லை.

“அனிதா,” ராமன் திரும்பவும் கூப்பிட்டார். இப்போது அனிதா கண்விழித்தாள். அதற்கு மேலும் என்னால் ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல பாசாங்கு செய்ய முடியவில்லை. என் கண்ணாடியைக் கையில் எடுத்துக்கொண்டு, கண்களை கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்ட பின் அனிதாவை நோக்கித் திரும்பினேன்.

ராமன் ஹாலிலிருந்து இரண்டு சேர்களை எடுத்து வந்தார். இதற்குள் அனிதா எழுந்து தன் கட்டிலில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கால்களை முக்கோண வடிவில் மடித்து, தன் கைகள் இரண்டையும் கோர்த்து சுருண்டு உட்கார்ந்துகொண்டு, ஒரு உயிரற்ற பொம்மை போல சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். மிகவும் சோர்ந்து பலவீனமாகவும் விரக்தியுடனும் காணப்பட்டாள். நாங்கள் சேர்களில் உட்கார்ந்தோம்.

ராமன் என்னிடம், “நாங்க என்னதான் செய்யனும்னு அவகிட்ட கொஞ்சம் கேளுங்க, விக்னேஷ்” என்றார். அவரை அலட்சியப்படுத்திவிட்டு அவளுடைய உயிரற்ற கண்களைப் பார்ப்பதைத் தொடர்ந்தேன்.

“வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகத் தோன்றுகிறது. நாம் ஒன்றை எதிர்பார்த்து ஒன்றைச் செய்கிறோம். ஆனால், வாழ்க்கை நமக்கு வேறொன்றைத் தருகிறது. வாழ்க்கை ஒழுங்கில்லாமல் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. வாழ்க்கை மிகச் சரியாக இயங்குகிறது. வாழ்க்கை சில மிக எளிமையான விதிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நாமதான் அதை சிக்கலாக்கி விடுகிறோம். அந்த விதிகளைப் பற்றிய அறிவு இல்லாததால்,” அனிதாவின் ஒளியற்ற கண்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே பேசினேன்.

ராமன், ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது, நீ என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்?’ என்று நினைத்திருக்க வேண்டும். ஒரு வடிகட்டிய முட்டாளைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்துவிட்டு, “விக்னேஷ், அவ கிட்ட கேளுங்க ...”

“இல்ல, அங்கிள். கார்த்திக்தான் சிக்கலாக்கிட்டான்,” அனிதாவின் உலர்ந்த தொண்டையிலிருந்து உடைந்த மெல்லிய கரகரப்பான ஆனால் உறுதியான குரல் வெளிப்பட்டது. அனிதா என்னை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் உயிர்பெற்று கோபத்தில் ஒளிர்ந்தன.

“சரி, அனிதா. கார்த்திக்தான் சிக்கலாக்கிட்டான்.” அனிதா பேச ஆரம்பித்ததே எனக்குப் போதுமானதாக இருந்தது. அவள் ஸ்மார்ட் என்று தெரியும். நான் தொடர்ந்தேன்.

“ஆனா, பாயின்ட் அதேதானே? வாழ்க்கை சரியாத்தான் இயங்குது. நாமதான் புரிஞ்சுக்கல.”

“அப்படின்னா ஏன் எனக்கு இது நடக்குது?”

“ஒருவேளை நீ நினைப்பது தவறாக இருந்தால்?”

அனிதா குழப்பமாக என்னைப் பார்த்தாள். “கார்த்திக்கை நான் கன்ட்ரோல் பண்ண முடியுமா?”

“ஏன் முடியாது?”

“என்னால முடியலயே.”

“ஒருவேளை, எப்படிங்கறது உனக்குத் தெரியாம இருந்தா?”

“அப்படியா?” அனிதா இப்போது கால்களை மடித்து வைத்து வசதியாக உட்காரந்து கொண்டாள். கண்களிலிருந்த கோபம், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துக்கு வழிவிட்டிருந்தது.

“எப்படி?” அனிதா விவாதத்தைத் தொடர்ந்தாள்.

“இந்த உலகம் இப்படித்தான் இயங்கனும்னு புரோக்ராம் பண்ணப்பட்டிருக்கு. யாராலயும் அந்த புரோகிராமை மாத்த முடியாது.”

“ஆனா நமக்கு ஃப்ரீ வில் இருக்கே?”

“இருக்குதான். ஆனா, நான் என்ன வேணும்னாலும் இங்க செஞ்சுக்கலாங்கிற அளவுக்கு, தங்குதடையற்ற முழுமையான சுய இச்சை யாருக்கும் கிடையாது.”

“அதாவது, கார்த்திக்கோட ஃப்ரீ வில், என்னால மாத்த முடியாதது இல்ல.”

“கரெக்ட்.”

“கார்த்திக் ஒழுங்கா பிஹேவ் பண்ற மாதிரி என்னால செய்ய முடியும்?”

“ஆமா.”

அனிதா சிறிது நேரம் யோசித்தாள். “உறுதியாத்தான் சொல்றீங்களா, அங்கிள்?”

“என்ன நம்பு, அனிதா. பிரியா என்னோட ஒரு கண்ணுன்னா, நீ இன்னோரு கண்ணு.”

“நீங்க வீட்டுக்குப் போறச்ச, நானும் உங்களோட வர்ரேன், அங்கிள்.”

“ப்ளீஸ்.”

அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே ராமனுக்கு விளங்கவில்லை. தன் பெண், நிமிடங்களில் விரக்தியிலிருந்து ஆர்வத்துக்கு மாறியதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆச்சரியத்தில் கண்கள் விரிய, “அங்கிள் ஆண்டியோட அவங்க வீட்டுக்குப் போறியா?” என்று அனிதாவைக் கேட்டார்.

அனிதா தலையை கீழும் மேலும் ஒருமுறை அசைத்தாள்.

“ஒரு மூணு நாள் எங்களோட இருக்கட்டும். புதன்கிழமை நான் வந்து விட்டுட்டுப் போறேன்,” என்றேன் ராமனிடம்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment