Thursday, May 16, 2019

Chapter 01 of 16 - D2H Story


*அத்தியாயம் 01*


ராமனால் அந்த பஸ் ஸ்டாப் ஸ்டோன் பென்ச்சில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவர் சற்று பதற்றமாகக் காணப்பட்டார். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை இருபதாவது தடவையாக கையில் எடுத்து, தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டிருந்தார். நெற்றியில் சற்று வேர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

அது ஒரு டிசம்பர் மாத குளிர்ந்த இரவு. பக்கத்திலிருக்கும் கிராமங்களையும் நகரங்களையும் விடவும் நெய்வேலியில் எப்போதும் ஒன்றிரண்டு டிகிரி கம்மியாகவே இருக்கும். ஆர்ச் கேட் பஸ் ஸ்டாப்பில் அந்த நேரத்தில் எங்களைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை. சென்னை செல்லும் பஸ்கள் அவ்வப்போது நிற்காமல் எங்களைக் கடந்து வேகமாக சென்று கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் சென்னையிலிருந்து வரும் பஸ் ஒன்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். ராமன் இப்போது தன் கண்ணாடியை மீண்டும் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார்.



ராமனை எனக்கு ஏழு வருடங்களாகத் தெரியும். அவருடைய வீடு என்னுடைய வீட்டிலிருந்து ஒரு தெரு தூரந்தான் இருக்கும். அவருடைய மகளும் என்னுடைய மகளும் கல்லூரித் தோழிகள் என்பதால் நாங்கள் இருவரும் நண்பர்களானோம்.

ஒருவழியாக பஸ் வந்து சேர்ந்தது. அனிதா ஒரு சின்ன சூட்கேசுடன் பஸ்ஸிலிருந்து இறங்கினாள். ராமன் ஓடிச் சென்று அந்த சூட்கேஸைக் கையில் வாங்கிக்கொண்டார். அவள் என்னைப் பார்க்கக்கூட இல்லை.

ராமனின் வீடு வரும்வரையில் காரில் யாரும் பேசிக் கொள்ளவில்லை. நான் ராமனிடம் விடைபெற்றுக்கொண்டு என் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.

சாலையில் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லை. தெருவிளக்குகளிலிருந்து புறப்படும் மஞ்சள் ஒளி, சாலையை ஒளிவெள்ளக் காடாக்கி இருந்தது. வானத்தின் உச்சியில் பிரகாசித்த நிலவு, செயற்கை மஞ்சள் ஒளியில் இயற்கை வெண்மையைக் கலந்திருந்தது. நிர்மலமாக இருந்த வானில் நிலவு ஏறத்தாழ தன் முழுவடிவையும் வெளிப்படுத்தி அழகு காட்டியது.

இத்தகைய அற்புத இயற்கை அழகைக் கண்டால், நான் என் நெஞ்சைப் பறிகொடுத்து, கண்ணைத் திறந்து கொண்டு நடந்துகொண்டே செய்யும் தியானத்தில் என்னை அறியாமல் இயல்பாக மூழ்கிவிடுவேன். அவ்வப்போது எழும் எண்ணங்களை அலட்சியப்படுத்தி, கவனத்தை என்னைச் சுற்றிலும் பன்முகப் படுத்திக்கொண்டு, சூனியத்தை வெறித்துக்கொண்டே நடக்கும் ஒரு விநோதமான தியானப் பயிற்சி அது. ஆனால், தற்போது என் மனம் இருந்த நிலையில் இயற்கையின் அற்புதத்தை ரசிக்கக்கூட இயலவில்லை; தியானம் செய்வது எங்கே?

அனிதா நெய்வேலியில் இருக்கும்போதெல்லாம், தன்னுடைய வீட்டில் இருக்கும் நேரத்தை விடவும் எங்கள் வீட்டில் இருக்கும் நேரந்தான் அதிகமாக இருக்கும். அவளுக்கு எங்கள் வீடு இரண்டாவது வீடு. எங்களுக்கு அவள் இரண்டாவது மகள். போன வருடம் டிசம்பரில் எங்கள் வீட்டில் வைத்து அவளைப் பார்த்தது. அஞ்சு வருஷம் வயதானது போல் இப்போது இருக்கிறாள்.

வீட்டுக்கு வந்தபோது நடுநிசியாகிவிட்டது. காலிங் பெல் சுவிட்ச்சை அழுத்திவிட்டு, என் மனைவி வந்து கதவைத் திறப்பதற்காகக் காத்திருந்தேன். என் மனைவி எப்போதும் அனிதாவைத் தன் மகளாக நடத்தியதில்லை. அவளுடன் விளையாடிக்கொண்டு, அவளுடைய தோழிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, டிவி நிகழ்ச்சிகளை விவாதித்துக்கொண்டு, அவ்வப்போது அவளோடு ஷாப்பிங் செய்ய வெளியில் சென்றுகொண்டு ... - அனிதா அவளுடைய தோழி.

“அனிதா எப்படி இருக்கிறாள்?” கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தாள்.

ஓகே என்னும் பொருள்பட “ம்ம்ம் ...” என்றேன் தலையை லேசாக அசைத்து.

“ஏதாவது சொன்னாளா?”

“இல்ல.”

“ராமன் சாராவது ஏதாவது கேட்டாரா?”

“இல்ல.”

“நீங்க யாரும் ஒண்ணும் பேசாமயே அஞ்சு கிலோமீட்டர் கார்ல வந்தீங்களா?”

நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். உள்ளே வந்து ஹாலில் இருந்த குஷன் சேரில் சரிந்தேன். என்னைப் பின்தொடர்ந்து வந்த கீதா, அருகிலிருந்த சோஃபாவில் உட்கார்ந்தாள்.

“கார்த்திக்கைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டேன்.

“கார்த்திக் நல்ல பையன்” என்று ஆரம்பித்த கீதா, “எனக்குத் தெரிந்தவரைக்கும்” என்ற டிஸ்க்ளைமரோடு முடித்தாள்.

“போன வருஷம் அனிதா இங்க வந்திருந்தப்ப, நீங்க ரெண்டு பேரும் நாள் முழுக்கப் பேசிட்டிருந்தீங்கல்ல...”

“ஆமா. கார்த்திக்கும் அனிதாவும் போன வருஷம் நவம்பர்ல டெல்லிக்குப் போயிருந்தாங்க. டெல்லில நிறைய இடம் போயிருந்தாங்கல்ல... அதப்பத்தி சொல்லிட்டிருந்தா” என்று குறுக்கிட்ட கீதா, கூடவே, “நீங்களுந்தான் இந்த இருபத்தஞ்சு வருஷத்துல சென்னையத் தாண்டி எங்கயாவது கூட்டிட்டுப் போயிருக்கீங்களா?” என்று சுயபுராணம் பாடினாள். தொடர்ந்து, “டெல்லிய எனக்கு மேப்லதான் காமிச்சிருக்கீங்க ...” என்று அங்கலாய்க்க, சுயபுராணம் முடிவதுபோல் தெரியவில்லை.

“ம்ம் ... கார்த்திக்கப் பத்தி ஏதாச்சும் சொன்னாளா?” கீதாவை சுயபுராணத்திலிருந்து மீட்டு தற்போதைய பிரச்சினைக்கு கொண்டுவர முயற்சி செய்தேன்.

“அவங்க தாஜ்மஹால் போயிருந்தப்ப ...”

“இல்ல, கார்த்திக்கப் பத்தி தப்பிதமா எதுவும் சொன்னாளான்னு கேக்கிறேன்.”

“சேச்சே, கார்த்திக்கப் பத்திப் பெருமையாதான் சொல்லிட்டிருந்தா.”

நான் அமைதியாக இருந்தேன்.

சற்று நேரம் கழித்து கீதா பேசினாள். “இந்த பிப்ரவரி வந்தா, அவங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கும்.”

நான் ஒன்றும் பேசவில்லை.

கார்த்திக்கை எனக்கு ஓரளவு தெரியும். நல்ல பையன்தான். அனிதாவுக்கு ஓரளவு நல்ல மேட்ச்தான். படிப்பு, வேலை, குணம் என எதிலும் பெரிதாக எந்த குறையும் இல்லை. கார்த்திக்கின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து விட்டு, நான் ஓகே சொன்ன பிறகுதான் ராமன் இந்த வரனை முடிப்பதென்று முடிவுசெய்தார். அனிதாவுக்கும் கார்த்திக்கைப் பிடித்திருந்தது. ஆனால், எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது ...

“நாளைக்குக் காலைல சுவேதா வீட்டுக்குப் போய் அனிதாகிட்ட பேசறேன்.” கீதா படுக்கச் சென்றுவிட்டாள்.

எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது ...

“நீங்க தூங்க வரலியா?”

“வர்ரேன், வர்ரேன்.” நான் சேரிலிருந்து எழுந்தேன்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment