Thursday, May 23, 2019

Chapter 15 of 16 - D2H Story


*அத்தியாயம் 15*


“அனிதா என்ன சொன்னா கார்த்திக்?”


அது அந்த வாரத்தின் சனிக்கிழமை. கீதா பிரியாவைப் பார்க்க, சென்னைக்குப் போயிருந்தாள். அது மதிய உச்சிவேளை. நாங்கள் என் வீட்டின் பக்கவாட்டு வெளிமுற்றத்தில் இருந்த ஒரு மாமரத்தின் கீழ், நிழலில் சேர்கள் போட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கார்த்திக் நேற்று இரவு அனிதாவைப் பார்க்க வந்திருந்தான். அவள் இன்று காலை, என்னிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு, கார்த்திக்கை இங்கு அனுப்பியிருந்தாள்.


“வேற ஒண்ணும் சொல்லலை. உங்களப் பாத்துட்டு வரச் சொன்னா.” கார்த்திக் சோர்வுடன் காணப்பட்டான். அவன் தயங்கித் தயங்கி, கூசிக் கூசிப் பேசினான்.

“ராமன் ஏதாச்சும் சொன்னாரா?”

“அவர் அனிதாவ என்னோட அனுப்பத் தயங்கறார்.” அவன் கண்கள் நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன.


நான் சற்று நேரம் அமைதியாக இருந்தேன். பிறகு அவனிடம், “அனிதாவோட அப்பாங்கற ஸ்தானத்துல, அவரோட கவலை நியாயமானதுதான்” என்றேன்.

கார்த்திக், “இன்னொரு தடவ இதுமாதிரி நடக்காது. அனிதாவ நான் நல்லாப் பாத்துப்பேன்” என்றான்.

நான் புன்னகைத்தேன். ‘நீ அவளைப் பார்த்துக்கொள்ளப் போகிறாயா? என் தேவதை உன்னை அற்புதமாகப் பார்த்துக்கொள்வாள், மகனே!’ நான் என்ன நினைக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

“பிராமிஸ், அங்கிள்.”

மீண்டும் புன்னகைத்தேன். பக்கத்திலிருந்த எலுமிச்சை மரத்தைப் பார்த்தேன். மரம் முழுவதும் பச்சையாகவும் மஞ்சளாகவும் நிறைய எலுமிச்சைகள் காய்த்திருந்தன. பார்வையை எலுமிச்சை மரத்தைவிட்டு எடுக்காமல், நான் பேசத் தொடங்கினேன்.


“எனக்கு ஒரு கதை தெரியும், கார்த்திக். கதைய கவனமாக் கேளு. உனக்கு பிரயோஜனமா இருக்கும்.”

கார்த்திக் தன் தலையை உயர்த்தி என்னை கவனித்தான். நான் தொடர்ந்தேன்.


“ஒரு ஊர்ல ஒரு பையன் இருந்தான். அவன் நல்லவன். அதனால, கடவுள் அவன ஆசீர்வதிக்க விரும்பி, அழகான ஸ்மார்ட்டான கிளி ஒண்ண, அவன் பொறுப்புல ஒப்படைச்சாரு. அந்த கிளிக்கு அவன ரொம்பப் பிடிச்சிருந்தது. அது வீட்டுக்கு உள்ளயும் வெளியயுமா பறந்து பறந்து தன்னோட இறக்கையின் அழகை எல்லாம் அவனுக்குக் காட்டும். அவன சந்தோஷமா வச்சிருக்க அது எல்லா முயற்சியும் பண்ணும்.


ஆனா, அந்தக் கிளி தன்ன விட்டுப் பறந்து போயிடுமோன்னு அந்தப் பையனுக்கு பயம். அதனால, அந்தக் கிளியோட இறக்கைய கொஞ்சம் வெட்டிவிட்டு அத ஒரு கூட்டுக்குள்ள அடைச்சு வெச்சுக்கிட்டான். அந்த கிளிக்கு அவன் மேல ரொம்ப பிரியம் இருந்ததுனால அது, இதையும் ஒரு பொருட்டா நினைக்கல. அது எப்பவும் போல அவன சந்தோஷமா இருக்க வைக்க முயற்சிபண்ணிட்டு இருந்தது. ஆனா, இப்போ அதனால அங்க இங்க வேகமா போக முடியாததுனால, அவனோட கவனத்த எப்பவும் ஈர்க்க ஆரம்பிச்சது. இது அந்தப் பையனுக்குப் பெரிய இம்சையா இருந்தது.


அவனுக்கு எப்ப தேவையோ, அப்ப மட்டும் தன்ன சந்தோஷப்படுத்தற மாதிரி வேற ஒரு பறவையத் தேடுனான். அப்படி ஒரு காக்கா கிடச்சது. அவன் இப்ப அந்த காக்காவோட தன்னோட ஓய்வு நேரம் முழுக்க கழிக்க ஆரம்பிச்சான். அதனால, அந்தக் கிளிக்கு ரொம்ப கோபம் வந்திருச்சு. அது பையன விட்டுட்டுப் போயிடுச்சு.


கிளிய இழந்த பிறகுதான் அதோட மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரிய வந்தது. இப்ப, அந்தப் பையன் அந்தக் கிளியத் தேடி வந்திருக்கான்.”


கார்த்திக் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம்மி அழுதுகொண்டிருந்தான். நான் அப்படியே விட்டுவிட்டேன். அவன் அனிதாவின் வலியையும் தன் முட்டாள்தனத்தையும் உணர வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து, அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பிச்சைக்காரன் போல பரிதாபமான கண்களால் என்னைப் பார்த்தான்.


“தப்பு எல்லாரும் பண்றோம், கார்த்திக்.” நான் அவனிடம் சொன்னேன். “நாம எல்லாருமே தவறுகள் பண்ணிட்டுதான் இருக்கோம். ஆனா, நம்ம தவறுகள்ல இருந்து பாடம் கத்துக்கலேன்னா, அந்த தவறுகள் செஞ்சதுக்கு அர்த்தம் இல்லாம போயிடும். ஏன்னா, பாடம் கத்துக்கத் தவறுன தப்புகள, திரும்பத் திரும்ப செஞ்சு வாழ்க்கைய நரகமாக்கிடுவோம்.”


கார்த்திக், “ஸார், நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க. அனிதா உங்களப் பத்தி ரொம்ப உயர்வா சொன்னா. நீங்க என்னய என்ன செய்யச் சொன்னாலும் செய்யறேன்” என்றான்.

நான் புன்னகைத்துவிட்டு, “கார்த்திக், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அனிதா ஒரு பொக்கிஷம்” என்றேன்.

நான் தொடர்ந்து, “உனக்கு இந்தப் பொக்கிஷம் கிடச்சதுனால மட்டும் நீ அதிர்ஷ்டசாலி இல்ல. அந்தப் பொக்கிஷமே உன்னய கவனிச்சுக்கப் போகுதுங்கிறதுனாலயுந்தான்” என்று சொன்னேன்.

“ஸார்?”

வீட்டின் முன் கேட் திறக்கப்படும் சத்தத்தைத் தொடர்ந்து, “அனிதா வந்தாச்சு” என்ற அனிதாவின் உற்சாகமான குரலும் கேட்டது.


எங்களைப் பார்த்துக்கொண்டே, “ரெண்டு பேரும் வாங்க. லஞ்ச் டைம்,” சத்தமாகச் சொல்லிவிட்டு, அனிதா வீட்டுக்குள் சென்றாள்.

கார்த்திக் என்னை மீண்டும் பார்த்து, “ஸார், நீங்க சொன்னது எனக்குப் புரியல” என்றான்.

“அவசியமில்ல. நான் சொன்னத ஒரு பேப்பர்ல எழுதி, அத உங்க வீட்டு பாத்ரூம் கண்ணாடில ஒட்டி வச்சுக்க.”

அவன் ஒப்புக்கொள்வதாக குழப்பத்தோடு தலையாட்டினான்.


நாங்கள் இருவரும் வீட்டுக்குள் சென்று டைனிங் ஹாலில் அமர்ந்தோம். அனிதா எங்களுக்கு மதிய உணவு பரிமாறினாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.


லஞ்ச் முடிந்ததும் அவர்கள் அனிதாவின் வீட்டுக்குப் புறப்படத் தயாரானார்கள். நாங்கள் முன் ரூமில் நின்றுகொண்டிருந்தோம்.

நான் கார்த்திக்கிடம், “எப்போ சென்னைக்குக் கிளம்பறீங்க?” என்று கேட்டேன்.

கார்த்திக், “நாளக்கி காலைல பத்தரைக்கு, ஸார்” என்றான்.

“ஓகே, நான் சென்னை டிராப்புக்கு கார் அரேஞ்ச் பண்ணிடறேன்.”

அனிதா கார்த்திக்கிடம், “நாம இங்க வந்திருவோம். கார் இங்கயே வந்திடட்டும்” என்றாள்.

“சரி” என்றோம்.


கார்த்திக், “பை, ஸார்” என்று சொல்லிவிட்டு, முன் கேட்டுக்கு நடந்தான்.

அனிதா என் முன்னால் நின்றுகொண்டு, தன் வலது உள்ளங்கையை என்னை நோக்கி நீட்டினாள். “எனக்கு நீங்க ஒரு பிராமிஸ் பண்ணனும்.”

“சரி, என் தேவதைக்கு என்ன பிராமிஸ் வேணும்?”

“முதல்ல நீங்க பிராமிஸ் பண்ணுங்க.”

“குடுத்தாச்சு.”

“அப்படியில்ல, உங்க உள்ளங்கைய என் கைமேல வைக்கணும்.”

நான் என் வலது உள்ளங்கையை அவள் நீட்டியிருந்த உள்ளங்கைமேல் வைத்துவிட்டு, “என்ன பிராமிஸ் நான் குடுக்கறேன்?” என்று கேட்டேன்.

அனிதா தன் கையை வெடுக்கென்று எடுத்துக்கொண்டு, “நான் ஃபில்லப் பண்ணிப்பேன்” என்று சொல்லிவிட்டு, திரும்பி கேட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

“என்னது? எனக்கே தெரியாத பிராமிஸ நான் என் தேவதைக்குக் குடுத்திருக்கேனா?”


அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள். தன் இரு கண்களையும் இறுக்கமாக ஒரு நொடி மூடித் திறந்தாள். பிறகு, தன் தலையை பதினைந்து டிகிரி இடதுபக்கம் சாய்த்துக்கொண்டு தன் டிரேட்மார்க் காந்தப் புன்னகையை வீசினாள். “உங்க தேவதை நாளக்கி உங்களுக்குச் சொல்லுவா.” அவள் மீண்டும் திரும்பி என் இதயத்தோடு கேட்டுக்கு நடந்தாள்.


அன்று இரவு தூங்கும் முன், ஒரு தடவை என் பெர்சனல் மெயில் இன்பாக்ஸை செக் செய்தேன். அனிதா தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருப்பதாக நோட்டிஃபிகேஷன் வந்திருந்தது. அவள் போஸ்ட்டைப் பார்ப்பதற்காக அதைக் கிளிக் செய்தேன்.


அவள் ஒரு படத்தை போஸ்ட் பண்ணியிருந்தாள். அது, ஒரு பெண் கடற்கரையில் கலங்கரை விளக்கம் ஒன்றின் அருகே நின்றுகொண்டு, அதன் உச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் படம். அதோடு ஸ்டேட்டஸிலும் டைப் செய்திருந்தாள். “கலங்கரை விளக்கத்தால் வழிகாட்டப்பட்டு, ஒருவழியாக கரைக்கு வந்து சேர்ந்துவிட்டேன். அது என் உயிரைக் காப்பாற்றி, என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது. எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நன்றி.”


நான் புன்னகையுடன் லைக் பட்டனை அழுத்தினேன்.


*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment