Thursday, May 23, 2019

Chapter 11 of 16 - D2H Story


*அத்தியாயம் 11*


ஆசிரமத்தை ஒட்டியிருந்த நடைமேடையில் திரும்பவும் சாலையைப் பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டோம். சாதாரணமாக, ஆத்மஞான செயல்விளக்க அனுபவமே பலருக்கும் புரிந்துகொள்ள முடியாத ஓர் ஆன்மீக நிகழ்வு. அதன் பின் இருக்கும் ஆன்மீக அறிவியலைப் புரிந்துகொள்வது என்பது, மிக மிகக் கடினமானது. இருந்தாலும், அனிதா அதீத புத்திகூர்மையுடன் வலது மூளையைப் பயன்படுத்தி சிந்திக்கும் திறமை வாய்ந்தவள் என்பதால் நான் விளக்க முடிவுசெய்தேன்.



“ஒரு கார்ட்போர்டு அட்டைய எடுத்துக்கிட்டு, அதுக்கு மேல கொஞ்சம் சின்னச் சின்ன ஆணிகளப் போட்டுட்டு, அதுக்குக் கீழ இருந்து ஒரு காந்தத்த மூவ் பண்ணுனோம்னா, மேல இருக்கற ஆணிகளும் நகருமில்லையா?”

அனிதா கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“எப்படி கீழ இருக்கற காந்தம் நகரும்போது மேல இருக்கற ஆணி எல்லாம் நகருது? மேல இருக்கற அந்த ஆணிகளையும் கீழ இருக்கற காந்தத்தையும் லிங்க் பண்றது எது?”

“காந்தப்புலம்.”

“ம். அதே மாதிரி, நம்ம உடல் ஆணி, உயிர்த்தன்மையோட இருக்கிறதுக்குக் காரணம், நம்ம ஆத்மா காந்தத்தோட கான்ஷஸ்னஸ் புலம்.”

“இப்ப நான் சொல்றேன். நம்ம ஆத்மாவோட கான்ஷஸ்னஸ் புலம் இல்லேன்னா, நம்ம உடல், ஆணி மாதிரி உயிரில்லாத ஜடம்.”

“எக்ஸாக்ட்லி.”

“மேல சொல்லுங்க, அங்கிள்.”


“இப்ப, இன்னொரு உதாரணம். ஒரு ஓபன் வெசல ஸ்டவ் மேல வச்சு, பால் காச்சிட்ருக்க.”

“ஓகே.”

“பால் கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு.”

“ஓகே.”

“இப்ப கேஸ கட் பண்ணிட்டேனா என்ன நடக்கும்?”

“பால் கொதிக்கிறது நின்னுடும்.”

“நம்ம உடல்ல இருந்து ஆத்மா கேஸ பிரிச்சிட்டோம்னா, நம்ம உடல்ல கொதிச்சிட்டிருக்கிற கோபப் பால் அமைதியாயிடும்.”

“புரிஞ்சது. நம்ம மனசுலேர்ந்து நம்ம ஆத்மா கேஸ எடுத்துட்டோம்னா, நம்ம மனசுல கொதிச்சிட்டிருக்கிற பயப் பால் அமைதியாயிடும்.”

“எக்ஸாக்ட்லி.”

“அதே மாதிரி, நம்ம நெஞ்சுலேர்ந்து நம்ம ஆத்மா கேஸ எடுத்துட்டோம்னா, நம்ம நெஞ்சுல கொதிச்சிட்டிருக்கிற வெறுப்புப் பால் அமைதியாயிடும்.”

“அவ்வளவுதான்.” அனிதா தன் அறிவுகூர்மையால் என்னை வியப்பில் ஆழ்த்தியது ஒன்றும் முதல் தடவை அல்ல.


நான் தொடர்ந்தேன்.

“ஆனா, உன் உடல்-மனம்-நெஞ்சத்திலேர்ந்து உன் ஆத்மா கேஸ உள்முகமாப் பிரிச்சு எடுக்கணும்னா, அதுக்கு முதல்ல, உன் கான்ஷஸ்னஸ் புலத்தை உன் உடல்-மனம்-நெஞ்சத்திலேர்ந்து வேறுபடுத்தி அனுபவத்துல பார்த்திருக்கணும்.”

“சேர்ந்து வந்திட்டிருக்கேன்.”

“நேத்து ஒரு ஆன்மீக ஃபீல்டப் பத்திப் பேசிட்டிருந்தோமில்லையா?”

“ஆமா. எல்லாரையும் எல்லாத்தையும் ஊடுருவி நிக்கற ஃபீல்டு.”

“ரைட். நான் என்னோட கவனத்த உன் மேல குவிக்கிறச்ச, அந்த ஃபீல்டு செயல்பட ஆரம்பிக்குது.”

அனிதா ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அது உன் கான்ஷஸ்னஸ் புலத்தை, உன் உடல்-மனம்-நெஞ்சத்திலேர்ந்து வேறுபடுத்தி, உன்னப் பார்க்கவைக்குது.”

“புரிஞ்சது.”

“இது வரைக்கும் சொன்னத சுருக்கமா இப்ப என் ஸ்மார்ட் பிரின்சஸ்ட்டேர்ந்து நான் கேட்கலாமா?”

“எப்போல்லாம் எனக்கு நடந்தத என்னால ஏத்துக்க முடியலயோ, எப்போல்லாம் என் எதிர்காலத்துல எனக்கு நம்பிக்கை குறையுதோ, எப்போல்லாம் என்னால வெறுப்ப விடமுடியலையோ, அப்போல்லாம் என் அங்கிள்ட்ட ஓடிவந்து கண்ணமூடி விளையாடற இந்த விளையாட்ட பத்து நிமிஷம் விளையாடனும்.” அவள் தன் தலையை பதினைந்து டிகிரி இடப்பக்கமாகச் சாய்த்துக்கொண்டு, தன் டிரேட் மார்க் காந்தப் புன்னகை சிந்தி, என் நெஞ்சை அபகரித்துக்கொண்டாள்.


இதற்குள் லஞ்ச் பிரேக் முடிந்து ஆசிரமம் திறக்கப்பட்டது. மக்கள் நடைமேடையில் வரிசையில் நிற்கத் தொடங்கினர். நாங்களும் எழுந்து வரிசையில் சேர்ந்துகொண்டோம்.


நாங்கள் வெளியே வந்து, மதிய உணவுக்காக பக்கத்திலிருந்த உணவகத்தை நோக்கி நடந்தபோது, நான் அனிதாவிடம் கேட்டேன். “உன் அப்பாகிட்ட நான் என்ன சொல்லட்டும்?”

“எனக்கெப்படித் தெரியும்?” என்றாள் அனிதா.

“என்னது?”

“என்ன, எப்ப செய்யணும்னு என் அங்கிளுக்குத் தெரியும்.”

“இது எனக்கு மிகப் பெரிய பொறுப்பு.”

“ஐ’ம் லக்கி.”

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment