*அத்தியாயம் 06*
“கார்த்திக்கோட கூட வேல பார்க்கிற ஒரு பெண்ணோட அவனுக்குத் தொடர்பு இருந்துச்சாம். அதான் அனிதா வந்துட்டாளாம்,” என்று கீதா என்னிடம் கூறினாள்.
நாங்கள் வீட்டின் முன்னே இருந்த திறந்தவெளி முற்றத்தில் சேர்களில் உட்கார்ந்திருந்தோம். அது நெய்வேலியின் ஒரு குளிர்ந்த ஞாயிறு இரவு.
வானத்தின் கிழக்கு விளிம்புக்கு மேல் முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது தன் ரோஹிணி நட்சத்திரத்துடன் நெருங்கி விளையாடிக் கொண்டிருந்தது. சாலையில் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. கீதா தன்னுடைய பிடித்த நிறமான சந்தனக்கலர் சேலை அணிந்திருந்தாள்.
“உனக்கெப்படித் தெரியும்? அனிதா அம்மா சொன்னாங்களா?”
“இல்ல, பத்மா சுவேதாட்ட இன்னக்கி சொன்னாங்க.”
“பத்மா யாரு?”
“ஹவுஸ் ஓனர். சுவேதா பத்மாகிட்ட ஃபோன் பண்ணிப் பேசுனாங்க.”
“சரி, அவங்களுக்கு எப்படித் தெரியும்மா? என்ன தெரியும்மா?”
“அது எங்களுக்குத் தெரியாது. ஆனா, கார்த்திக்க நிறைய தடவ ஒரு பொண்ணோட அங்கங்க பார்த்திருக்காங்களாம். அவங்களுக்கு அந்தப் பொண்ணயும் தெரியும்மா.”
“யாராம் அவ?”
“கார்த்திக் ஆபீஸ்ல கூட வேல செய்யிறவளாம்.”
நான் சற்று நேரம் மௌனமாக இருந்தேன்.
“சுவேதா என்ன சொல்றாங்க?”
“அவங்க ரொம்ப கவலப்படறாங்க. மேரேஜ் முடிஞ்சதுன்னு அனிதா சொல்லிட்டாளாம்.”
“அதனால?”
“அவங்க நாளக்கி ஒரு லாயரப் பார்த்துப் பேசப்போறாங்க.”
“எதுக்கு?”
கீதா என் கண்களை நேராகப் பார்த்தாள். “வேற எதுக்கு? டிவோர்ஸ் பண்றதுக்குத்தான். டிவோர்ஸ் முடிஞ்சதும் ரீமேரேஜ் பண்ணிடலாம்னு பிளான்.”
நான் நிலவைப் பார்த்தேன். அது ஆங்காங்கே திரிந்த மேகங்களோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. பௌர்ணமியின் ஒளியை மீறி ரோஹிணி ஒளிர முயன்று கொண்டிருந்தது.
“கார்த்திக்ட்ட ராமன் ஸார் பேசலியாம்மா?”
“அனிதா ஒத்துக்க மாட்டேங்கறா.”
“நீ என்ன நினைக்கிற?”
“வேற என்ன வழி இருக்கு?”
நிலவு வானுச்சியை நோக்கிப் பயணித்தபடி இருந்தது. ரோஹிணியும் பின் தொடர்ந்தது. அவள் தன் காதலனை விடுவதாக இல்லை.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” கீதா என்னை வினவினாள்.
நான் இன்னும் ரோஹிணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். “இன்னக்கி வேணா ரோஹிணி நிலவ விடாம இருக்கலாம். நாளக்கி விட்டுத்தான ஆகணும்.”
கீதா மீண்டும் கேட்டாள். “அனிதாவோட ரீமேரேஜ் பத்திக் கேட்டேன்.”
“தேவைப்படுமா, பார்க்கலாம்.”
*****
அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.
No comments:
Post a Comment