*அத்தியாயம் 04*
“அங்கிள், எனக்கு ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு சொல்றேன்னு சொன்னீங்க” அனிதா ஞாபகப்படுத்தினாள். வெளிர் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். அவள் முகமும் சற்று வெளிறித்தான் இருந்தது. இருந்தாலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் முகத்தில் தென்பட்டது.
நாங்கள் நெய்வேலியிலிருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த ஒரு கோவிலில் உட்கார்ந்திருந்தோம். அனிதாவை சில கோவில்களுக்கு அழைத்துச் செல்லலாம் என நான்தான் முடிவெடுத்திருந்தேன். சுவேதாவை ஆறுதல் படுத்துவதற்காக கீதா சுவேதா வீட்டுக்குச் சென்றுவிட்டாள். கோவிலுக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது மாலையாகி விட்டது. அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் நல்ல கூட்டம்.
கோவில் இரண்டு பகுதிகளாகக் கட்டப்பட்டிருந்தது. மேல் பகுதி ஒரு சின்ன மலைமேலும், கீழ்ப்பகுதி அந்த மலையின் அடிவாரத்திலும் கட்டப்பட்டிருந்தன. திருவந்திபுரம் ஹயகிரீவர் கோவிலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நாங்கள் மலைமேல் இருந்த கோவிலின் திறந்த வெளியில் உட்கார்ந்திருந்தோம். வைணவத்தின் மிகச்சிறந்த ஆச்சாரியர்களுள் ஒருவரான தேசிகன் தியானம் செய்த புனித இடத்தின் எதிரே அமர்ந்திருந்தோம். பெரும்பாலான பக்தர்கள் கீழ்க்கோவிலில் குழுமியிருந்தனர். அங்கே கோவில் சம்பிரதாய விழா ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதனால், மலைக்கோவிலிலும் சுற்றியிருந்த திறந்தவெளியிலும் அங்கங்கே ஓரிரு பக்தர்கள் நடமாட்டமே தென்பட்டது. மாலைத் தென்றல் புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது.
நாங்கள் கோவிலுக்கு டாக்ஸியில் வந்து கொண்டு இருந்தபோதே அனிதா இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள். எனக்கு டிரைவர் முன் இந்த டாபிக்கைப் பற்றிப் பேச விருப்பமில்லாததால் கோவிலுக்கு வந்தபின் பேசுவோம் என்று சொல்லியிருந்தேன். அதனால்தான் இப்போது எனக்கு ஞாபகப்படுத்தினாள்.
எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் தேசிகன் தியானம் செய்த நந்தவனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் அனிதாவிடம் திரும்பி, “ஒருவேளை கார்த்திக் உனக்கு கால் பண்ணினால் நீ என்ன சொல்வ?” என்று கேட்டேன்.
“அவன் நம்பரை பிளாக் பண்ணிட்டேன்.” உடனே பதில் வந்தது.
சற்றே அதிர்ச்சிக்குள்ளான நான் கேள்வியை மாற்றிக்கேட்டேன். “சரி. உன்னைப் பார்க்க நெய்வேலிக்கு வந்தால்?”
“அந்த அயோக்யன் வரமாட்டான்.”
“முட்டாள்னா சொன்ன?”
“சரியாத்தான் கேட்டீங்க. ஸ்க்கவுண்ட்ரல் ...” அவள் முகம் ஆத்திரத்தில் சுளித்தது. “என் செருப்பக் கழட்டி அடிப்பேன்.”
நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன்.
“எத்தனை வாரமா இப்படி உனக்கு அவன் மேல வெறுப்பு?”
“பல மாசம்.”
நான் பெருமூச்சுவிட்டேன். “உன்னோட இந்த வெறுப்புதான் உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம்.”
அனிதா என் கண்களை நேராகப் பார்த்தாள். “அங்கிள், உங்களுக்குத் தெரியாது. அவன் என்னென்ன செஞ்சான்னு.”
“உன்னோட நியாயங்களக் கேட்கிற மாதிரி இந்த உலகம் புரோக்ராம் பண்ணப்படல.”
“ஆனா ... ம், சரி. அவன் தான் நினைக்கிற மாதிரி என்ன வேணா பண்ணுவான். எல்லா ஒழுங்கீன விவகாரமெல்லாம் பண்ணிப்பான். என்னைய ஏமாத்துவான். எனக்கு அநியாயம் பண்ணுவான். என்னைய எப்படி வேணா பலிகடா ஆக்குவான். இந்த உலகம் அவனுக்கு தண்டனை குடுக்காது. ஆனா, நான் அவனை என்னன்னு கேள்வி கேட்டா, என்னோட வாழ்க்கைய நரகமாக்கிடும். அப்படித்தான, அங்கிள்?” அனிதா தன்னுடைய குமுறலைக் கொட்டினாள்.
“நீ ரியாக்ஷனே குடுக்கக் கூடாதுன்னு நான் சொல்லலியே. நீ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலியே. அவனத் திருத்த முயற்சி எடுக்கக் கூடாதுன்னு சொல்லலியே. அவன் சொன்னதுக்கு உனக்கு என்ன சொல்லனும்னு தோணுதோ அதச் சொல்லு. அவன் செஞ்சதுக்கு உனக்கு என்ன செய்யனும்னு தோணுதோ அதச் செய்யி. ஆனா, உன் நெஞ்சுல வெறுப்பு இருக்கக்கூடாது. அதுதான் என்னோட பாயின்ட்.”
“வெறுப்பில்லாம எப்படி ரியாக்ஷன் கொடுக்க முடியும்?”
“முடியும்.”
“நோ அங்கிள், அது முடியாது.”
“அது எப்படின்னு நீ இன்னும் தெரிஞ்சுக்கல.”
அனிதாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. நான் புன்னகைத்தேன்.
“அங்கிள், நான் ரொம்ப சீரியஸாப் பேசிட்டிருக்கேன். இது என் வாழ்க்கை.”
“நானும் சீரியஸாதான் பேசிட்டிருக்கேன். பிரியா என் ஒரு கண்ணுனா, நீ இன்னொரு கண்ணு.”
“ஓகே. எப்படின்னு சொல்லுங்க. எப்படி வெறுப்பில்லாம ரியாக்ட் பண்றது?”
“சொல்றதென்ன, என் பிள்ளைக்கு நிரூபிச்சே காண்பிக்கிறேன்.”
அவள் முகத்தில் ஆர்வமும் குழப்பமும் ஒருங்கே தென்பட்டது. “கதை சொல்லப்போறீங்களா?”
நான் பக்கவாட்டில் தலையசைத்தேன். “என் பிள்ளையோடு ஒரு விளையாட்டு விளையாடப் போகிறேன்.”
“என்ன விளையாட்டு?”
“ஒரு சிம்பிள் கேம். நீ உன் கண்களை அஞ்சு நிமிஷம் மூடியிருக்கனும் ...”
“ஒண்ணுலேர்ந்து பத்துக்குள்ள ஒரு நம்பர நினைச்சுக்கனும்,” அவள் நக்கலாகக் குறுக்கிட்டாள்.
“நீ ஒண்ணும் நினைக்கவும் வேணாம். எதுவும் சான்ட்டிங் பண்ணவும் வேணாம். எதையும் கற்பனை செய்யவும் வேணாம். ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் கண்ண மூடிட்டு, அப்புறம் கண்ணத் திறக்கனும். அவ்வளவுதான். நீ கண்ணத் திறக்கறப்ப உனக்கு அது எப்படின்னு புரிஞ்சுருக்கும்.”
“நீங்க ஆன்ஸர டெலிபதி மூலமா என் மூளைக்கு அனுப்பிடுவீங்க.” மீண்டும் நக்கல்.
“ம்ம்ம் ... அப்படியும் சொல்லலாம்.”
இப்போது அவள் என்னைச் சுத்தமாக நம்பவில்லை. இருந்தாலும் தன் கண்களை மூடிக்கொண்டாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் கண்திறந்தபோது, அவள் கண்கள் நம்பிக்கையில் ஒளிர்ந்தன. சற்று நேரம் எதுவும் பேச முடியவில்லை. தனக்குள் நடந்ததைத் திரும்பத் திரும்ப சிந்தித்துக் கொண்டிருந்தாள். பின், என்னைக் கேட்டாள், “என்ன அனுப்பினீர்கள், அங்கிள்?”
*****
No comments:
Post a Comment