Monday, May 20, 2019

Chapter 05 of 16 - D2H Story


*அத்தியாயம் 05*


“உன்னோட அனுபவம் எப்படி இருந்துச்சு?” நான் அனிதாவைக் கேட்டேன்.

சற்று நேரம் அவள் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. தன் கண்களை மூடிக்கொண்டு அந்த அனுபவத்தை மீண்டும் அசைபோட முயன்றாள்.

“மேஜிக்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“எனக்கு மேஜிக் தெரியாது.”

நான் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள். “ஒரு மாயாஜாலம் போல இருந்தது. என்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் ரிலாக்ஸாயிடுச்சு. எதையும் யோசிக்கனும்னு எனக்குத் தோணவே இல்ல. என்னோட எதிர்காலத்தப் பத்தி எந்தக் கவலையும் படல. யாரப் பத்தியுமே யோசிக்கத் தோணல. ஆனா, அது என்னங்கறது இன்னமும் எனக்குப் புரியல.”

“இதுவரைக்கும் நான் கேட்டதுலயே மிக அருமையான விளக்கம்.”

“நீங்க என்ன செஞ்சீங்க?”

நான் அவளுக்கு பதில் சொல்லவில்லை.

“அது ஏன் மறைஞ்சிடிச்சு?”

“நான்தான் சொன்னேன்ல, அது ஒரு டெமோன்னு.”

“அத எப்படி நான் பெர்மனன்ட்டா ரியலைஸ் பண்றது?”

“அதுக்கு சில வருஷங்களாகும்.”

அவள் பெருமூச்சுவிட்டாள்.


சற்று நேரம் கழித்து திரும்பவும் கேட்டாள். “நீங்க என்ன செஞ்சீங்க?”

நான் பதில் சொல்லவில்லை.


சற்று நேரம் யோசனையோடு அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“நீங்க யாரு?”

“உன்னோட அங்கிள். பிரியாவோட டாட்,” நான் புன்னகைத்தேன்.

“அதில்ல, நான் என்ன ...”

“நீ எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுனது என்னன்னு உனக்குத் தெரியுமா?” நான் குறுக்கிட்டேன்.

“தெரியல. ஆனா, அது ரொம்பப் பெரிய விஷயம். அது எனக்கு ரொம்பத் தேவைப்படுற விஷயம். ஒருவேள, அது என்னோட பிரச்சினை எல்லாத்தையும் தீர்க்கக்கூடிய விஷயமா இருக்கலாம். யெஸ், அப்டித்தான் நினைக்கிறேன். ஆனா, இதுக்கு முன்னாடி அத நான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுனது இல்ல. ஸோ, அது என்னன்னு எனக்குத் தெரியல.”

“அது நீ.”

“ஹ்ம்ம் ... ஆமா, நான்தான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுனேன்.”

“நீ எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுனது உன்ன.”

“ஸாரி?”

“நீ யாரு?”

“நான் உங்க நீஸ், என் டாடோட டாட்டர்,” அவள் புன்னகைத்தாள்.

“இல்லையா, பின்னே?” நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

“என்னோட விளையாடாதீங்க, அங்கிள். நான் இப்போ சீரியஸா இருக்கேன். அது என்ன?”

“அதத்தான் நானும் சொல்லிட்டிருக்கேன். அது, அது இல்ல, நீ.”

“நான் இந்த விளையாட்டுக்கு வரல. இப்படியே நீங்க விளையாடிட்டு இருந்தீங்கன்னா, நான் உங்களோட பேசமாட்டேன்.”

அவள் தொண்ணூறு டிகிரி அந்தப் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

இப்போது எனக்கு நம்பிக்கை பிறந்தது. இனி, இந்தப் பிள்ளை மீண்டும் டிப்ரஷனுக்குப் போகமாட்டாள்.

“சரி, சரி. நான் விளையாட மாட்டேன். இந்தப் பக்கம் திரும்பு.” ஆனால், நான் அவளுடன் விளையாடவே இல்லை என்பதுதான் உண்மை. அவள் திரும்பினாள்.

“சரி, இப்படி விளக்க முடியுமா பார்க்கறேன். நீ மேட்ரிக்ஸ் படம் பாத்திருக்கியா?”

“நிறைய தடவ.”

“ஸ்பூனை வளைக்கும் பையன் சொல்வது ஞாபகமிருக்கா?”

“ஸ்பூன வளைக்க முயலாதீங்க, அது முடியாது. அதுக்கு பதில் உண்மைய உணர முயற்சி பண்ணுங்க. ஸ்பூனே இல்லைங்கற உண்மைய,” ஆங்கிலத்தில் சரளமாக பதில் வந்தது.

“ரைட். அத இப்படி அர்த்தம் பண்ணுவோம். ஸ்பூன் இருக்கிற அதே தளத்தில் நீ இருக்கிறவரைக்கும் உன்னால ஸ்பூன வளைக்க முடியாது. ஆனா, எப்ப அதுக்கு மேல இருக்கிற தளத்துக்குப் போறியோ, அப்ப நீ வெறுமனே பார்த்தாலே போதும். ஸ்பூன் வளைஞ்சிடும்.”

“ஆனா என் ஸ்பூன எல்லாம் வளைக்க நான் விரும்பல.” தன்னுடைய அப்பாவிப் பார்வையால் ஒரு விநாடி என்னை ஆச்சரியப்படுத்தினாள். பின், தன் கழுத்தை பதினைந்து டிகிரி தனக்கு இடது பக்கமாக வளைத்து மிக அழகாக புன்னகைத்தாள். அவளுடைய காப்பிரைட் காந்தப் புன்னகை. என் இளவரசியின் இந்த பொக்கிஷப் புன்னகையைக் காண இத்தனை நேரம் காக்க வேண்டியதாயிற்றே! என் இதயம் கரைந்து, என் உடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, என் கண்களுக்குக் கண்ணீரை பம்ப் பண்ணத் தொடங்கியது. மிகுந்த பிரயாசையோடு என் இதயத்தை மீண்டும் உறைய வைத்து, கண்ணீரைக் கண்களுக்குள் உறிஞ்சி அனுப்புவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

“கண்டிப்பா விரும்பமாட்டாய்,” நான் நனைந்த கண்களுடன் புன்னகைத்து வைத்தேன். ஒரு நாள் என் கண்களிலிருந்து கன்னம் நெடுக கண்ணீர் வழிந்தோட, இந்தப் பிள்ளையிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளப் போகிறேன்.

“ஸாரி, அங்கிள், உங்கள டைவர்ட் பண்ணிட்டேன்,” அவள் முகம் இப்போது சீரியஸாக இருந்தது.

திரும்பவும் புத்தியின் லாஜிக் வளையத்துக்குள் வருவதற்கு வெறுப்பாக இருந்தது.

“ஸோ, உனக்கு உன் இதயத்தோட வெறுப்ப கட்டுப்படுத்தனும். உன் மனசில இருந்து முயற்சி செஞ்சா, பரிதாபமா தோத்துப் போயிடுவ. உன் மனசு, கார்த்திக் உனக்கு செஞ்சது எல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டே இருக்கும். அந்த ஞாபகத்தால உன் முயற்சி வீணாப் போயிடும்.” அவள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள நிறுத்தினேன்.

“அக்ரீடு.”

நான் தொடர்ந்தேன். “கட்டுப்படுத்துவதற்குப் பதிலா கவனிக்க ஆரம்பிச்சிட்டயானா, உன் வெறுப்பு தானாவே அடங்கிடும்.”

“எங்கேர்ந்து கவனிப்பது? மனசில இருந்தா?”

“நீ உன் மனசுல இருந்தியானா, உன்னாலக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய மட்டுந்தான் முடியும்.”

“அப்போ?”

“நீ உன்னிடந்தான் இருக்கனும்,” நான் புன்னகைத்தேன்.

“ஓ நோ, அங்கிள் ... இன்னொரு தடவையா?” அவள் தன் தலையை பக்கவாட்டில் அசைத்துக்கொண்டே புன்னகைத்தாள்.


நாங்கள் எழுந்தோம். படிக்கட்டு வழியாக கீழ்க்கோயிலுக்குச் சென்றோம். அங்கு மஹாலக்ஷ்மியை வழிபட்டுவிட்டு நெய்வேலி திரும்பினோம்.


நாங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, கீதா சுவேதா வீட்டிலிருந்து ஏற்கனவே வந்திருந்தாள். டின்னர் முடித்தபின், அனிதா பிரியாவின் அறைக்கு தூங்கச் சென்றுவிட்டாள். எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அனிதா பிரியாவின் அறையைப் பயன்படுத்திக்கொள்வாள்.

ஹாலில் உட்கார்ந்து நான் அலுவலகக் கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகில் வந்த கீதா, “அனிதா ஏன் கார்த்திக்கை விட்டு வந்தாள்னு எங்களுக்குத் தெரிஞ்சிருச்சு” என்று கிசுகிசுத்தாள்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment