*அத்தியாயம் 12*
“அந்த கம்ப்யூட்டர் படிப்பில் இன்னம் ஆர்வம் இருக்கா?” நான் அனிதாவைக் கேட்டேன்.
அது செவ்வாய் இரவு. எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்துவிட்டு, அனிதாவை அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் நின்ற சோடியம் தெருவிளக்குகள், சாலையில் மஞ்சள் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சின. ஒரு சில வாகனங்களே சாலையில் சென்றுகொண்டிருந்தன.
“எனக்குத் தெரியல. இன்ட்ரஸ்ட் இருக்கு. ஆனா, இப்போ இருக்குற நிலைமைல என்னால படிக்க முடியுமா தெரியல.”
“ம் ...”
“நீங்க என்ன நினைக்கறீங்க அங்கிள்?”
“ஒரு வாரமோ ரெண்டு வாரமோ கழிச்சு அதப்பத்தி யோசிக்கலாம்.”
“ஓகே.”
நாங்கள் அவள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தோம்.
அனிதா சொன்னாள். “டெய்லி உங்க வீட்டுக்கு வருவேன், அங்கிள்.”
“அது உன் வீடு.”
“ஒரு நாளைக்கு ரெண்டு தடவை வந்து உங்கள டிஸ்டர்ப் பண்ணுவேன்.”
“உன் இஷ்டம்.”
வீட்டுக்குள் செல்லும் முன், நான் அனிதாவிடம் கேட்டேன். “இந்த மூணு நாள்ல நீ மூணு ரூல்ஸ நல்லாவே கத்துக்கிட்ருப்பன்னு எனக்குத் தெரியும். நீ ரொம்ப ஸ்மார்ட். இருந்தாலும், என் திருப்திக்காக ஒரு தடவ அந்த மூணு ரூல்ஸயும் சொல்லு.”
“ஷ்யூர், அங்கிள். ஒண்ணு, வெறுப்பு என் வாழ்க்கைய நரகமாக்கிடும். ரெண்டாவது, வாழ்க்கைல பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. ஏன்னா, என் ஆத்மாவோட எல்லா தேவைகளும் கண்டிப்பா பூர்த்தியாகும். மூணாவது, வாழ்க்கைல என்ன நடந்ததோ அத எல்லாம் நான் ஏத்துக்கிடணும். ஏன்னா, என் ஆத்மா அத விரும்பினதுக்குக் கண்டிப்பா ஒரு காரணம் இருக்கு.”
“பெர்ஃபக்ட். வீட்டுக்குள்ள போ. நான் உன் அப்பாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பறேன்.”
அவள் உள்ளே சென்றாள்.
ராமன் வீட்டின் வெளிமுற்றத்தில் ஒரு சேரில் அமர்ந்திருந்தார். அவருடன் அனிதாவின் முன்னேற்றம் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு, என் வீட்டுக்குத் திரும்பினேன்.
ஆபீஸ் மெயில்களுக்கு பதில் எழுத வேண்டியிருந்தது. அதை எல்லாம் முடித்துவிட்டு, பெர்சனல் மெயில் இன்பாக்ஸை செக் பண்ணினேன். அனிதா தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருப்பதாக நோட்டிஃபிகேஷன் வந்திருந்தது. அவள் போஸ்ட்டைப் பார்ப்பதற்காக அதைக் கிளிக் செய்தேன்.
அவள் ஒரு படத்தை போஸ்ட் பண்ணியிருந்தாள். அது கடலிலிருந்து கரையை நோக்கிச் செல்லும் ஒரு படகிலிருந்து எடுக்கப்பட்ட, கரையிலிருந்து ஒளி வீசும் கலங்கரை விளக்கத்தின் படம். அதோடு ஸ்டேட்டஸிலும் டைப் செய்திருந்தாள். “நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். ஆறு மாதங்களாக இருட்டில் கரையைத் தேடி நீந்தி அலைந்தவள், கலங்கரை விளக்கத்தைக் கண்டுகொண்டேன். கரையை அடைவதற்கு இன்னமும் மைல் கணக்கில் நீந்த வேண்டியிருக்கிறது. ஆனால், எப்படி எங்கு செல்லவேண்டும் என்று தெரிந்துகொண்டேன். நான் பாக்கியசாலியும்கூட. எனக்கு மோட்டார் படகு ஒன்றும் கிடைத்திருக்கிறது. இனி, நான் கஷ்டப்பட்டு நீந்தவும் வேண்டாம். படகில் ஏறி வசதியாக உட்கார்ந்துகொண்டு, மூன்று சுழலும் ஒளிவிளக்குகளைத் தாங்கி நிற்கும் கலங்கரை விளக்கத்தை நோக்கி படகைச் செலுத்த வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நன்றி.”
நான் புன்னகையுடன் லைக் பட்டனை அழுத்தினேன்.
*****
அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.
அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.
No comments:
Post a Comment