Thursday, May 23, 2019

Chapter 09 of 16 - D2H Story


*அத்தியாயம் 09*


“நீங்க என்ன நினைக்கிறீங்க?” ராமன் என்னைக் கேட்டார்.


நாங்கள் என் வீட்டின் திறந்தவெளி முன்முற்றத்தில் சேர்களைப் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கீதா அனிதாவை அருகிலிருந்த கடை ஒன்றுக்குக் கூட்டிச் சென்றிருந்தாள். அது மாலை ஏழு மணி என்பதால் ரோட்டில் டிராபிக் கொஞ்சம் இருந்தது. ராமனின் முகம் சோர்ந்தும் வருத்தமாகவும் காணப்பட்டது.


“நாம எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்க முன்னாடி, கார்த்திக் கிட்ட ஒரு தடவை பேசிடனும்னு நினைக்கிறேன்.”

“ஆனா, அனிதாவுக்கு அது சுத்தமா பிடிக்கல.”

“மாசக் கணக்கா கஷ்டத்த அனுபவிச்சவ இல்லையா, புரிஞ்சுக்க முடியுது.”

“நாம வேற என்ன செய்யறது?”

“வெயிட் பண்ணலாம்.”

“எவ்வளவு நாள் வெயிட் பண்றது?”

“வாரக் கணக்கா ஆகலாம். ஒருவேளை மாதக் கணக்காகவும் ஆகலாம். இந்த மாதிரி முக்கியமான முடிவை எல்லாம் அவசரப்பட்டு எடுக்க முடியாது.”


ராமன் சற்று நேரம் அமைதியாக யோசனையில் இருந்தார். பின், கேட்டார். “கார்த்திக் பத்தி அவள் ஏதாச்சும் உங்ககிட்ட சொன்னாளா?”


நான் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல விரும்பவில்லை. நான் வானத்தின் மேற்கு விளிம்பை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். சுக்கிரனைக் காணோம். அது விடிகாலை கிழக்குப் பக்கம் தோன்றியிருக்க வேண்டும்.


“அவள் பிரச்சினையிலேர்ந்து மெதுமெதுவா மீண்டு வந்திட்ருக்கா. இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணுவோம். அப்புறமா, நாம கார்த்திக்கோட பேச ஒத்துப்பா.”

ராமன் ஒப்புதலாகத் தலையை அசைத்தார். பின் கொஞ்ச நேரம் தன் எண்ணங்களில் மூழ்கியிருந்தார்.


நான் மீண்டும் மேற்கு வானத்தைப் பார்வையிட்டேன். சனி இப்போது வான் விளிம்புக்கு மேல் தென்பட்டது.


ராமன் சற்று தயங்கி கேட்டார். “நீங்க கார்த்திக்ட்ட பேசறீங்களா?”

“அனிதா சம்மதம் இல்லாம நான் பேசமாட்டேன்.”

ராமன் இந்த பதிலை என்னிடமிருந்து எதிர்பார்த்திருக்க வேண்டும். இருந்தாலும் சற்று சங்கடமாக உணர்ந்தார்.


சற்று நேரம் யோசித்துவிட்டு, பின் சொன்னார். “நான் சென்னைக்குப் போய் கார்த்திக்கப் பாத்துப் பேசட்டுமா?”

“எதுக்காக?”

“என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்ல. இப்ப என்ன போயிட்டுருக்குன்னும் தெரிஞ்சிக்கலாம்.”

“தெரிஞ்சிக்கிட்டு?”

“இல்லேன்னா, எப்படி ஒரு முடிவெடுக்க முடியும்?”

“தெரிஞ்சிக்கிட்டாலும் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. அனிதா சம்மதிக்கனும்ல.”

“நீங்க அனிதாவ சம்மதிக்க வைக்கலாம்ல? நீங்க சொன்னா அவ கேப்பா.”

“உங்களுக்கு என்னப் பத்தி தெரியல.”

“இல்ல, அவ சின்னப் பிள்ளதான. உலக நடப்புகளப் பத்தி எதுவும் தெரியாதுல. நாமதான் அவளுக்கு நல்லது கெட்டது சொல்லித் தரணும்.”

“உங்களுக்கு உங்க மகளப் பத்தியும் தெரியல.”

“ப்ளீஸ், விக்னேஷ். இது ரொம்ப முக்கியம்.”

“ராமன், உங்க அக்கறையும் கவலையும் எனக்கு நல்லாவே புரியுது. அதே சமயம், என்னோட பொறுப்பும் எனக்குத் தெரியும். நான் அனிதாவையும் பிரியாவையும் ஒரே மாதிரிதான் நினைக்கிறேன்.”

“விக்னேஷ், அனிதாவோட எதிர்காலத்த யோசன பண்ணித்தான் நீங்க பேசுறீங்கன்றது புரியது. ஆனா, சுவேதா கவலப்படறா. நாம சும்மா எப்படி உட்கார்ந்திருக்கிறது?”

“சரி. உங்க மகளுக்கு எது நல்லதுன்னு உங்களுக்குத் தோணுதோ, நீங்க அதச் செய்யிங்க. அவளுக்கு நான் என்ன செய்ய முடியுமோ, அத நான் செய்யிறேன்.”


இதற்குள், கீதாவும் அனிதாவும் ஆட்டோவில் வந்து இறங்கினர்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment