Friday, May 17, 2019

Chapter 02 of 16 - D2H Story


*அத்தியாயம் 02*


கிளப் செயலாளர் என்னைப் பற்றியும் நான் பேச இருந்த டாபிக் பற்றியும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு நூறு பேர் போல அமரக்கூடிய லெக்சர் ஹால். அது பாதிக்கு மேல் காலியாக இருந்தது. இந்த மாதிரி சுவாரஸ்யமில்லாத டாபிக்கைக் கேட்க யார் வருவார்கள்?

வந்தவர்களும் கூட ஆர்வத்தில் வந்திருப்பார்கள் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் சும்மா டைம் பாஸ் பண்ணுவதற்காக சிலர் வந்திருக்கலாம். லெக்சர் முடிந்ததும் கிளபில் கிடைக்கும் இலவச லஞ்ச்சுக்காக சிலர் வந்திருக்கலாம். ஒரு சிலர் நாள் முழுவதும் தங்கள் வாழ்க்கைத் துணையின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக வந்திருக்கலாம்.

அனிதாவின் நிலைமையைப் பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருந்ததால் எனக்கும் அன்று லெக்சர் கொடுப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை. காலை உணவு முடிந்ததும் கீதா அனிதாவைப் பார்க்கச் சென்றுவிட்டாள். நானும் போகவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், நான் இருந்தால் அனிதா ஃப்ரீயாகப் பேசமாட்டாள் என்று நினைத்துப் போகவில்லை. ஆகவே, ஏற்கனவே ஒத்துக்கொண்ட இந்த லெக்சர் கொடுப்பதற்காக இங்கே வந்துவிட்டேன்.

இறைஞானம் பற்றி செகரட்டரி மிக நன்றாகவே அறிமுக உரையாற்றிக்கொண்டிருந்தார். முகபாவனையை வைத்துப் பார்க்கும்போது, குறைந்தது அரை டஜன் பேராவது இந்த டாபிக்கில் ஆர்வமுள்ளவர்கள் போலத்தான் தோன்றியது. இருந்தாலும் நான் பேசப்போவதை அவர்கள் புரிந்துகொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஒவ்வொரு தடவையும் இறைஞானம் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால், பேச ஆரம்பித்ததும் ...

“இப்போது விக்னேஷ் அவர்களைப் பேச அழைக்கிறேன். ஸார், ப்ளீஸ் ...” செகரட்டரி என்னைப் பேச அழைத்தார்.

நான் பேச ஆரம்பித்தேன். இந்தத் தடவையும் நான் சொல்ல வந்ததை எளிமையாகச் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். முதலில் இறைஞானத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு சிறிது நேரம் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஆடியன்ஸை ஈர்ப்பதில் தோல்வி கண்டேன். இறைஞானத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பதே பெரிய விஷயமாக இருக்க, அதற்கு இரண்டுமுறை தொடர்ந்து அறிமுகம் கொடுத்தால் யார்தான் பொறுமையாக கேட்பார்கள்?

அதனால், என்னுடைய ஆன்மீக சாதனைப் பயணத்தைத் தொடங்குவதில் எனக்கிருந்த சவால்களைப் பற்றிப் பேசத்தொடங்கினேன்.

“... பிறகு, என் நண்பர் ஒருவர் என்னுடைய ஆன்மீக ஆர்வத்தை கவனித்துவிட்டு, பெரிய மனதுடன் என்னை அவருடைய குரூப்பில் சேர்த்துக்கொண்டார். அந்த குரூப் இந்திய அளவில் பாப்புலராக இருந்த பெரிய கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தது. அந்த குரூப்பில் சேர்ந்து ஒரு மாதம் ஆனதும் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்தது. சொல்லப்போனால், குரூப்பில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அந்த சந்தேகம் வந்துவிட்டது. ஆனால், அப்போதே அதனை என் நண்பரிடம் கேட்க எனக்குத் துணிவு வரவில்லை.

இப்போது ஒரு மாதம் கழித்து கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நண்பரிடம் கேட்டேன். ‘கிருஷ்ணனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’

என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘இல்லை’ என்றார்.

‘நம்முடைய குரூப்பிலோ, இல்லை நம்முடைய இயக்கத்திலிருக்கும் வேறொரு குரூப்பிலோ, கிருஷ்ணனைப் பார்த்தவர் யாராவது இருக்கிறார்களா, உங்களுக்குத் தெரியுமா?’

என்னை, தொடர்ந்து ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ‘இல்லை’ என்றார்.

நான் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, ‘எத்தனை வருஷமா இந்த குரூப்ல இருக்கீங்க?’

‘பதினெட்டு’ என்றார், நான் எதற்காக கேட்கிறேன் என்று தெரியாமல்.

அன்றே அந்த குரூப்பைவிட்டு வெளியேறிவிட்டேன்.

பதினெட்டு வருஷங்களாக எந்த ஒரு ஆன்மீக முன்னேற்றமும் இல்லையென்றால், அந்த குரூப்பில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? சும்மா டைம் பாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? அது என்ன மாதிரியான இடம்? குடும்பத்தில் நீங்கள் சந்திக்கும் சவால்களிலிருந்து தப்பித்து ஒளிவதற்கான இடமா? தொழிலில் நீங்கள் சந்திக்கும் எதிர்ப்புகளிலிருந்து தப்பித்து ஒளிவதற்கான இடமா? அல்லது, சமூகத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தப்பித்து ஒளிவதற்கான புகலிடமா?”

நான் பேசுவதை சில விநாடிகள் நிறுத்திவிட்டு, ஆடியன்ஸை ஒருமுறை வலமிருந்து இடமாகப் பார்வையிட்டேன்.

ஆடியன்ஸில் பாதிக்குமேல் தலை கவிழ்ந்து தங்கள் கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனில் மூழ்கியிருந்தனர். அங்கிருந்தவர்கள் ஏறத்தாழ எல்லோருமே ஏதாவது ஓர் ஆன்மீக இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள். என்னுடைய கேள்விகளை யார் ரசிப்பார்கள்? ஆர்வத்துடன் காணப்பட்ட அந்த அரை டஜன் பேருங்கூட இப்போது சற்று குழப்பத்துடன் காணப்பட்டனர்.

இந்த ட்ராக்கில் போனால் சரியாக வராது என்று இறைஞானம் அடைவதற்கான படிநிலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன்.

“... அப்படி ஓர் அற்புதமான புலத்தை அனுபவித்திருக்கமாட்டீர்கள். உங்கள் உள்ளிருந்து கிளம்பி உங்கள் உடலின் பௌதிக வரையறையைத் தாண்டி எல்லா திசைகளிலும் விரிந்து பரந்து நிற்கும் புலம் அது.

மயான அமைதியுடன் கூடிய புலம் அது. அப்படி ஓர் அமைதியை உங்கள் வாழ்நாளிலேயே அனுபவித்திருக்கமாட்டீர்கள். உங்கள் மனம் அதிர்ந்து நின்றுவிடும். சுத்தமாக காலியாகிவிடும். எண்ணங்களை விடுங்கள், உங்கள் மனமே இருப்பது உங்களுக்குத் தெரியாது. அந்தப் புலத்தின் அமைதியை ரசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

உங்கள் ஆத்மாவின் உணர்வு முழுவதுமாக இந்தப்புலத்தில் உறிஞ்சப்பட்டுவிடும். ஆத்மா தன்னந்தனியாக இந்தப் புலத்தின் நடுவே நிற்கும்.”

பரமாத்ம தரிசனத்தை வர்ணித்துக்கொண்டே ஆடியன்ஸ் ரியாக்ஷனை எடைபோட்டேன்.

இப்போது குறைந்தது ஒரு டஜன் பேரைக் காணவில்லை. அநேகமாக டைனிங் ஹாலில் அவர்கள் பிஸியாக இருப்பார்கள் என்று ஊகித்தேன். அந்த ஆர்வங்காட்டிய அரை டஜன் பேரும் என்னை ஒரு கோமாளியைப் பார்ப்பதைப்போல இரக்கத்துடன் பார்த்தனர். ஒவ்வொருவருக்கும் இறைஞானத்தைப் பற்றி ஓரளவுக்கு ஐடியா இருக்கும். ஆனால், இப்படி நாமரூபமில்லாத ஒரு குப்பையை யாரும் கனவில் கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார்கள்.

இதற்குமேல் எனக்கு ஐடியா வறண்டுவிட, வரையறுக்கப்பட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே பேச்சை முடித்துக்கொண்டேன். எனக்கும் பசி ஒரு பக்கம். அனிதா கீதாவிடம் என்ன சொன்னாள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒரு பக்கம். அதனால், அதற்குமேல் பேச்சைத் தொடர்வதில் சுவாரஸ்யமில்லை.

ஆனால், கிளப் செகரட்டரிக்கு வேறு ஐடியா இருந்தது. முதல் வரிசையிலிருந்து கையில் மைக்குடன் எழுந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். “இப்போ கேள்வி-பதில் செஷன். விக்னேஷ் ஸார் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்” என்று அறிவித்தார்.

உடனே, ஹாலின் நடுவிலிருந்து சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் எழுந்தார். செகரட்டரி மைக்கை அவருக்கு பாஸ் செய்தார்.

மைக்கை வாங்கிய சிவப்பு சட்டை, “சார், நீங்கள் நிஜமாகவே ஞானமடைந்தவர்தானா?” என்று கேட்டார்.

கேள்வியை கொஞ்சம் பவ்யமாகவே கேட்டாலும் அதில் நிறைய எகத்தாளம் தெளிக்கப்பட்டிருந்தது. என்னால் கேள்வியின் நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதற்குள் செகரட்டரி எழுந்து, “மனோகர், உட்காருங்க. இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. மைக்கை இங்க பாஸ் பண்ணுங்க” என்று கடிந்துகொண்டார்.

நான், “பரவாயில்லை ஸார். நான் பதில் சொல்றேன்” என்று செகரட்டரியிடம் சொன்னேன்.

உண்மையிலேயே எனக்கு அந்த கேள்விக்கு பதில் சொல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்று வரையில் என் மனைவி என்னுடைய ஆன்மீக சாதனை எதனையும் ஒத்துக்கொண்டதில்லை. எதிர்காலத்திலும் அவள் ஒப்புக்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பூமியில் என் மனைவியை விடவும் கேவலமாக என்னுடைய ஆன்மீக சாதனையை விமர்சித்தவர்கள் யாரும் இருக்கமுடியாது. நான் இன்று ஓரளவு அடக்கமாக இருக்கிறேன் என்றால், அதற்கு என்னுடைய இறைஞானத்தை விடவும் என் மனைவி கீதாவின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

இதற்கிடையில் அந்த சிவப்பு சட்டை மீண்டும் பேச ஆரம்பித்தார். “ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் அட்டகாசங்களை எல்லாம் தினமும் பேப்பரில் படிக்கிறோமே ஸார் ... அதனாலதான் ...”

இந்த சப்-டைட்டில்தான் உண்மையிலேயே என்னை தர்மசங்கடப்படுத்தியது. இப்போது ஆடியன்ஸ் அவரை சுவாரஸ்யத்துடன் கவனிக்க ஆரம்பித்திருந்தனர்.

“கவலைப்பட வேண்டாம்,” கேள்வியின் அவசியத்தை மீண்டும் விளக்குகிறேன் என்று இன்னொரு குண்டைப் போட்டுவிடுமுன், நான் முந்திக்கொண்டேன். “கவலைப்பட வேண்டாம். ஆசிரமம் எதுவும் அமைக்கும் யோசனை என்னிடம் இல்லை. நீங்கள் யாரும் உங்கள் தொழிலை விட்டுவிட்டு, என்னிடம் வந்து சேர்ந்து வீணாய்ப் போகவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் சொத்தை எல்லாம் எனக்கு எழுதி வைத்துவிட்டு தெருவில் நிற்கவேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு வருமானத்திற்கு ஒரு வேலை இருக்கிறது. அது என் குடும்ப செலவுக்கு போதுமானது. உங்கள் பணம் எதுவும் எனக்கு வேண்டாம்.”

நான் தொடர்ந்தேன். “ஒருவேளை நான் ஏதாவது சமூகக் கட்டுப்பாட்டை மீறி ஆன்மீகப் போர்வையில் ஒழுங்கீனமான செயல்களைச் செய்தால், என் மனைவியே என்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிடுவார்...”

ஆடியன்ஸின் சிரிப்பொலி அடங்க சற்று நேரமானது. என்னுடைய முழு லெக்சர் டயத்திலும் நான் சாதிக்க இயலாததை அந்த சிவப்பு சட்டை ஒரே கேள்வியில் சாதித்துவிட்டார்.

“நான் உங்களுடன் வாழ்கிறேன். உங்களோடு வேலை செய்கிறேன். உங்களோடு வெளிப்படையாகப் பழகுகிறேன். என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால், நீங்கள் யாரும் பயப்பட வேண்டியதில்லை.”

சிவப்பு சட்டை தன் இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதற்குள் இரண்டு டஜன் பேர் ஹாலுக்குத் திரும்பி இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் லஞ்ச்சை முடித்திருக்கவேண்டும். அல்லது, இந்த உரையாடல் சற்று சுவாரஸ்யமாக இருந்திருக்கவேண்டும்.

சிவப்பு சட்டை அமர்ந்திருந்த திசையைப் பார்த்து நான் தொடர்ந்தேன். “நான் ஞானம் அடைந்தவனாய் இருக்கிறேன், அல்லது, மாயையில் கட்டுண்டு வீணாய்ப் போகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அது என் பிரச்சினை. என்னுடைய ஆன்மீக சாதனையை அளவிட நான் தனி அளவுகோல் வைத்திருக்கிறேன். என்னுடைய இந்த ஆன்மீகப் பயணத்தில் என் ஆத்மா இருக்குமிடத்தை அளவிட என்னிடம் சில பெஞ்ச்மார்க் ஒப்பீடுகள் இருக்கின்றன. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதைப்பற்றி பேசுவதால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.”

இப்போது சபையில் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவுக்கு அமைதி. அந்த ஆர்வமுடன் இருந்த அரை டஜன் பேரும் அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

நான் தொடர்ந்தேன். “உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில்தான் அக்கறை இருக்கவேண்டும். நான் இறைஞானம் அடைந்தவன் என்றால், அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் வாழ்வு முன்னேற்றமடைய நான் உங்களுக்கு என்ன செய்யமுடியும்? இதுதான் உங்கள் அக்கறையாக இருக்கவேண்டும்.”

இப்போது ஆடியன்ஸ் அனைவரின் முழுக்கவனமும் என்னிடம் பதிந்தது. நான் தொடர்ந்தேன். “என்னிடமிருந்து ஆன்மீக உரைகளை எதிர்பார்க்காதீர்கள். அதெல்லாம் இன்டர்நெட்டில் ஏராளமாகக் கிடைக்கும். உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து அதைவிட அற்புதமான ஒன்றை நீங்கள் பெறலாம். நீங்கள் யாரென்று உங்களுக்கு என்னால் காட்ட முடியும். உங்கள் ஆத்மாவை உங்களுக்கு செயல்விளக்கமாக என்னால் காண்பிக்க முடியும். உங்களுடைய உடலிலிருந்து உள்முகமாக உங்கள் ஆத்மாவை வேறுபடுத்தி நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்க முடியும். உங்களுடைய உடலிலிருந்து உள்முகமாக வேறுபடுத்தப்பட்ட ஆத்மாவின் அனுபவத்தை என் முன்னிலையில் நீங்கள் உடனடியாகப் பெறமுடியும். இறைஞானம் அடைந்தவர்களிடமிருந்து நீங்கள் பெறும் மிகப்பெரிய பேறு இதுதான். இந்த நிலையை அடைவிப்பதற்காகத்தான் நீங்கள் சேர்ந்திருக்கும் எல்லா ஆன்மீக இயக்கங்களும் முயற்சி செய்கின்றன.”

கூட்டத்தில் சிலர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் என்னைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அந்த சிவப்பு சட்டையைக் கூப்பிட்டு ஆத்மஞான செயல்விளக்கம் செய்துகாட்டலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, செகரட்டரி என்னிடம் வந்தார். “உங்க மிசஸ் பேசுனாங்க. உங்களை ராமன் ஸாரோட வீட்டுக்கு உடனே வரச்சொன்னாங்க,” என்று என் காதில் சொன்னார்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment