Thursday, May 23, 2019

Chapter 13 of 16 - D2H Story


*அத்தியாயம் 13*


“தியாகம் அன்பிலிருந்து வருகிறது. ஆனால், அன்பு தியாகத்தை நம்பி இல்லை.” நான் அனிதாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.


அது பிப்ரவரியின் நடுவாரத்தில் ஒரு புதன்கிழமை. கீதா எனக்கு வலப்பக்கமும் அனிதா எனக்கு இடப்பக்கமுமாக, நாங்கள் மூவரும் எங்கள் வீட்டின் முன்வெளி முற்றத்தில் சேர்களில் முக்கோணமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாலை ஆறு மணி இருக்கும். இருட்டி இருந்தது. அனிதா இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.


கீதா இப்போது குறுக்கிட்டாள். “ஏன், உங்களுக்காக நான் என்னோட ஆசைகளை எல்லாம் தியாகம் பண்ணலையா?”

“நான் உன்னய தியாகம் பண்ணச் சொன்னனா?”

“உங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சேன்.”

“எனக்கு கீதாவத்தான் பிடிக்கும், கீதா மேல போர்த்தப்பட்ட விக்னேஷ இல்ல.”

“ஆன்ட்டி, அங்கிள் எனக்காக பேசிட்டிருக்காரு. எனக்கு அது ரொம்ப முக்கியம். அவரப் பேச விடுங்க.”

“சரி, அப்படின்னா, நான் கிச்சனுக்குப் போயி நமக்கு டீ போட்டு எடுத்துட்டு வாரேன்.” கீதா வீட்டின் உள்ளே சென்றாள்.


நான் தொடர்ந்தேன். “அன்பு, வாழ்க்கைத் துணைகிட்ட இருந்து தியாகத்த எதிர்பார்க்கிறதில்ல. அன்பு, வாழ்க்கைத் துணையோட அன்பத் தக்க வச்சுக்கிடறதுக்காக தியாகம் செய்யறதில்ல. அன்பு, வெறுமனே தன்னத் தானே அனுபவத்தில் வெளிப்படுத்திக்கிடறதுக்காக இயல்பா தியாகம் பண்ணும்.”


“ஒருவேளை, வாழ்க்கைத் துணைகிட்ட இருந்து அன்பு, தியாகத்த எதிர்பார்த்தா?”

“அப்போ, அது அன்பா இருக்க முடியாது. அது பயம்.”

“எதப் பத்தின பயம்?”

“வாழ்க்கைத் துணையோட அன்ப இழந்திருவோமோங்கற பயம்.”

“ஸோ, நான் என்னோட வாழ்க்கை லட்சியங்களையும் விருப்பங்களையும் தியாகம் பண்ணுனது, கார்த்திக்கோட பயத்தத் திருப்திப்படுத்தத்தான்?”

“கரெக்ட்.”


அனிதா சற்று நேரம் மௌனமாக யோசனையில் ஆழ்ந்தாள். நான் வானத்தின் மேற்கு விளிம்பை ஆராயத் தொடங்கினேன். அமாவாசை நெருங்கி வருவதால், நிலவைக் காணவில்லை. சாலையின் எதிர்ப்புறம் மிக உயரமாக நின்ற மாமரத்தின் இலைகளின் ஊடே சுக்கிரன் அழகாகப் பிரகாசித்தது.


“ஒருவேளை, அன்பு, வாழ்க்கைத் துணையோட அன்பத் தக்கவச்சிக்கிடறதுக்காக தியாகம் பண்ணிச்சுன்னா?”

“அன்பு, வாழ்க்கைத் துணையோட பயத்தப் போக்குறதுக்காக வேணும்னா தியாகம் செய்யலாம். ஆனா, வாழ்க்கைத் துணையோட அன்பத் தக்கவச்சிக்கிடறதுக்காக தியாகம் பண்ணிச்சுன்னா, அது அன்பா இருக்கமுடியாது. அதுவும் பயம் தான்.”

“வாழ்க்கைத் துணையோட அன்ப இழந்திருவோமோங்கற பயம்.”

“எக்ஸாக்ட்லி.”


“இப்போ நான் சொல்றேன். என்னோட அன்ப இழந்திருவோமோங்கற பயத்தில கார்த்திக் எங்கிட்ட இருந்து தியாகத்த எதிர்பார்த்தான். அவனோட அன்ப இழந்திருவோமோங்கற பயத்தில நானும் அந்த தியாகங்களப் பண்ணியிருக்கேன்.”

“கரெக்ட்.”

“பிறகு?”

“அது உன்ன, அவன நம்பி இருக்க வச்சது. அன்பு உன்ன சுதந்திரமாக்கும். பயம் உன்ன அடிமையாக்கும்.”

“புரிஞ்சது.”

“ஒரு அடிமை அன்ப வெளிப்படுத்த முடியாது. அவ பயத்த மட்டுந்தான் வெளிப்படுத்த முடியும்.”

“எப்படி?”

“தன் வாழ்க்கைத் துணைய, தன்ன நம்பி இருக்க வைக்க முயற்சி செய்வதன் மூலமா.”


கீதா எல்லோருக்கும் டீ எடுத்து வந்தாள். அனிதா அமைதியாகக் குடித்தாள். கீதா எங்களுடைய கப்புகளை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குச் சென்றாள்.


அனிதா பேசினாள். “கார்த்திக், கிளப்புக்குப் போகாத, எனக்கு கம்பனி குடு. கார்த்திக், வீட்டுல வந்து ஆபீஸ் வேலயப் பாக்காத, சினிமா போலாம். கார்த்திக், கிரிக்கெட் பாத்தது போதும், வா, ரெஸ்டாரன்ட் போலாம். இப்படி, நானும் அவன்ட்ட இருந்து தியாகங்கள எதிர்பார்த்திருக்கேன்.”

“பயம் ஒரு தொற்றுவியாதி. அவன் உன்னோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்டான். உன்னய, அவன நம்பி இருக்க வச்சான். அப்பறம், நீ அவனோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்ட.”

“அப்புறம் என்ன ஆச்சு?” அனிதாவுக்கு போஸ்ட்-மார்ட்ட ஆய்வில் ஆர்வம் கூடிக்கொண்டே போனது.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment