Thursday, May 23, 2019

Chapter 08 of 16 - D2H Story


*அத்தியாயம் 08*


நான் என்னுடைய ஆன்மீக நிலையை அனிதாவிடம் விளக்க விரும்பவில்லை. ஆனால், சொல்வதற்கு அவள் வலியுறுத்திக் கொண்டிருந்தாள். சூரியன் வானத்தின் உச்சிக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு சில பக்தர்களே அந்த திறந்தவெளி முற்றத்தில் காணப்பட்டனர்.



“ஓகே, அனிதா. நான் யார்? நான் ஒரு ஆத்மா.”

“நானுந்தான். அந்தக் குட்டிக் குரங்குந்தான்.”

“பார்த்தியா, இப்ப ஆன்மீகமும் கத்துக்கிட்ட.”

“டன் கணக்கா நேத்தே கத்துக்கிட்டேன். இப்போ கத்துக்க விரும்பல. தெரஞ்சுக்க விரும்புறேன்.”

‘கிட்ஸ்!’ எனக்கு அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. “உனக்கு என்ன தெரிஞ்சுக்கனும்?”

“இந்த ஆத்மாவுல என்ன ஸ்பெஷல்னு,” தன் வலது ஆள்காட்டி விரலால் என் இதயத்தைச் சுட்டிக்காட்டி, உறுதியுடன் சொன்னாள்.

இந்தப் பிள்ளை இன்று என்னை தப்பிக்க விடப் போவதில்லை. நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.


“இந்த பொருட் பிரபஞ்சத்தை ஆன்மீகப் புலம் ஒன்று ஊடுருவி நிற்கிறது,” என்று ஆரம்பித்தேன்.

அவள் வசதியாக உட்கார்ந்துகொண்டு என்னை கவனிக்கத் தொடங்கினாள்.

“அது மிகவும் நுண்ணியது. அது எல்லாவற்றையும் ஊடுருவி நிற்கிறது. அந்த கோபுரத்தை. இந்த மரத்தை. அந்த குரங்கை. இந்த கோவில் முழுவதையும் ...” நான் நிறுத்திவிட்டு அவளை கவனித்தேன்.

“கேட்டுட்டு இருக்கேன்.”

“அது எவ்வளவு நுண்ணியதுன்னா, உன்னோட ஆத்மாவையே ஊடுருவி நிற்பது. என் ஆத்மாவையும். அந்த குரங்கோட ஆத்மாவையும்.”

“புரியுது.”

“அது இங்க எல்லா இடத்துலயும் இருக்கு.”

“ஆனா, நான் ஏன் அதப் பார்க்க முடியல?”

“ஏன்னா, அத உணரக்கூடிய அளவுக்கு உன்னோட மூளை இன்னமும் தயாராகல. உன்னோட கண்கள் அதப் பார்க்கக்கூடிய அளவுக்கு இன்னமும் தயாராகல.”

“ஸோ, அப்படி தயாரான யார் வேணும்னாலும் அதப் பார்க்கலாம்?”

“ரைட்.”

“மேல சொல்லுங்க.”

“அது ரொம்ப சக்தி வாய்ந்தது. உன்னோட பயத்த சுத்தமா காலிபண்ற அளவுக்கு சக்தி வாய்ந்தது.”

“புரிஞ்சுக்கிட்டேன்,” அனிதா ஒரு சின்ன புன்னகையுடன் சொல்லிவிட்டு, தொடர்ந்தாள். “அது என் வெறுப்பையும் மறைய வெச்சிடும்.”

“எக்ஸாக்ட்லி.”

“ஆனா, அதுகிட்ட இருந்து இந்த சர்வீஸ வாங்கிக்கிற டெக்னாலஜிய கத்துக்கிட எனக்கு சில வருஷங்களாகும்.”

“உண்மை.”

“அது வரைக்கும் அதுகிட்ட இருந்து இந்த சர்வீஸ் எனக்குக் கிடைக்க, என் அங்கிள் ஏதோ ஒரு மேஜிக் செய்வாரு.”

நான் புன்னகைத்தேன்.

அவள் எழுந்தாள்.

நானும் எழுந்தேன்.


உமாதேவியை வழிபட்டுவிட்டு, நாங்கள் கோயிலிலிருந்து கிளம்பி, மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். வீட்டுக்கு வருவதற்கு மாலை ஆகிவிட்டது.


அனிதாவின் விவாகரத்து, மறுதிருமணம் பற்றிப் பேசுவதற்காக ராமன் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று கீதா சொன்னாள்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.

No comments:

Post a Comment