Wednesday, May 22, 2019

Chapter 07 of 16 - D2H Story


*அத்தியாயம் 07*


“... அப்படி ரமணர் சிறுவனாக இருக்கும்போதே இங்கு வந்து தியானம் செய்துகொண்டிருப்பார். சிவப்பு எறும்புகள் எல்லாம் அவர் கால்களில் ஏறிக் கடிக்கும். அதை எதையும் பொருட்படுத்தாமல் அவர் தியானத்தில் மூழ்கியிருப்பார் ...” சன்னதி குருக்கள் ரமணர் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அந்த சம்பவங்கள் எல்லாம் முன்னமே புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், அனிதா கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் குருக்களின் கதை சொல்லும் நேர்த்தியை ரசித்துக்கொண்டிருந்தேன்.

அது திங்கட்கிழமை காலை. நாங்கள் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் பாதாள லிங்க சன்னதியில் நின்றுகொண்டிருந்தோம்.

நான் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருந்தேன். கீதா சுவேதா வீட்டுக்குச் செல்ல விரும்பினாள். காலை உணவு முடித்ததும் நாங்கள் நெய்வேலியிலிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்து ஒண்ணரை மணிநேர டிரைவ்.


நாங்கள் அந்த பாதாள லிங்க சன்னதியிலிருந்து வெளியில் வந்து, கோவிலின் பரந்து விரிந்த திறந்தவெளி முற்றத்துக்கு வந்தோம். ஒரு மூலையில் இருந்த படிகளில் அமர்ந்தோம். அனிதா கோபுரத்தைப் பார்த்து உட்கார்ந்துகொள்ள, நான் தொண்ணூறு டிகிரியில் கொடிமரத்தைப் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். அவள் லைட் சாக்லட் கலர் சேலை அணிந்திருந்தாள். கண்களைச் சுற்றி இருந்த கருவளையங்கள் மறைந்திருந்தன. அவள் முகத்தில் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இன்னும் நீங்கவில்லை. ஆனாலும் நேற்றைவிட முகம் இன்று சற்று தெளிவாக இருந்தது. கழுத்தைச் சுற்றி இருந்த நீண்ட சிவப்புத் தடிப்பு மறைந்திருந்தது.

“என்ன, அங்கிள்?”

“ஒன்றுமில்லை.”

“நீங்க என்னயப் பார்த்துட்டிருந்தீங்க?”

அவள் கழுத்தை நான் பார்க்க யத்தனித்ததை அவள் கவனித்திருக்க வேண்டும்.

“சும்மாதான்.”

“நீங்க என்ன பார்த்தீங்கன்னு எனக்குத் தெரியும்.”


நான் வலது பக்கமாக தலையைத் திருப்பி, உயரமாக நின்ற கோவிலின் முன்கோபுரத்தைப் பார்த்தேன். கோபுரத்தின் நடுவில் குட்டிக் குரங்கு ஒன்று தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்தது.


“நீங்க என்ன பார்த்தீங்கன்னு எனக்குத் தெரியும்,” அவள் திரும்பவும் சொல்லி என் கவனத்தை ஈர்க்க முயன்றாள். இப்போது தன் கால்களை முக்கோணமாக உயர்த்தி மடக்கி, தன் கைகளால் சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.


சில மீட்டர்கள் தள்ளி தரையில் சிதறிக் கிடந்த உணவுப் பொருட்களை பெரிய குரங்கு ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அருகிலிருந்த குட்டிக் குரங்கு ஒன்று அதில் சிலவற்றை எடுத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் அது அருகில் வரும்போது பெரிய குரங்கு அதனை விரட்டி விட்டது. இப்படி இரண்டு மூன்று தடவைகள் விரட்டி விடப்பட்ட குட்டிக் குரங்கு இந்தத் தடவை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, பெரிய குரங்கின் அருகில் சென்று, வேகமாக கொஞ்சம் தின்பண்டங்களை கையில் அள்ளிக்கொண்டு, கோபுரத்தை நோக்கிப் புயலெனப் பாய்ந்தது.


“வாழ்க்கையைப் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை.” நான் பேசத் தொடங்கினேன். “இங்கே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.”

அனிதா நிமிர்ந்து உட்கார்ந்து கேட்கத் தொடங்கினாள்.

“நாம் பிறந்த உடனே, நம்முடைய ஆத்மாவின் இந்த இப்பிறவிக்கான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்ற கேரண்டியை இவ்வுலகம் நமக்குத் தந்துவிடுகிறது.”

“ஆனா, நம்மோட தேவை எல்லாம் நிறைவேறலியே?” அனிதா குறுக்கிட்டாள்.

“நான் நம்ம மனசோட தேவைகளப் பத்திச் சொல்லல. நம்ம ஆத்மாவோட தேவைகளப் பத்திப் பேசிட்டிருக்கேன்.”

“புரிஞ்சது.”

“ஸோ, நம்மோட எதிர்காலத்தப் பத்தி நாம கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.”

“ஆனா, எனக்கு என் மனசோட ஆசைகள் நிறைவேறலியேன்னு கவலையா இருக்கே.”

“ஏன்னா, நாம எதுக்காகப் பிறவி எடுத்துருக்கோம்னு நமக்குத் தெரியல.”

“எதுக்காக?”

“நம்ம ஆத்மாவோட தேவைகளை அனுபவத்தில் உணர்வதற்கு.”


அனிதா நான் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முயன்றாள். சிறிது நேரம் கழித்துக் கேட்டாள்.

“ஒருவேளை, நம்ம ஆத்மாவோட தேவைகளை நம்மால தாங்க முடியலைன்னா?”

“நம்மால தாங்க முடியாத தேவைகள நம்ம ஆத்மா விரும்புமா, என்ன?”

“அப்படின்னா, வாழ்க்கை ரொம்ப வலியும் வேதனையுமா இருக்கறதா நாம ஏன் நினைக்கிறோம்?”

“ஏன்னா, நம்ம மனசோட தேவையில்லாத பயத்தால.”

“நம்ம மனசு ஏன் பயத்துலயே வாழுது?”

“ஏன்னா, அதுக்கு நம்ம எதிர்காலம் தெரியாததுனால. நம்மோட இறந்த காலத்த நம்மோட எதிர்காலத்துல திணிக்கப் பார்க்கிறதுனால.”

“ஆனா, நான் என் மனசோடதான வாழ்ந்தாகனும். எப்படி அதோட பயத்துலேர்ந்து நான் தப்பிக்கமுடியும்?”


நான் திரும்பவும் கோபுரத்தைப் பார்த்தேன். இப்போது அங்கே குரங்குகள் எதுவும் தென்படவில்லை.


அனிதா திரும்பவும் கேட்டாள். “என்னோட மனசு என் எதிர்காலத்த நினைச்சு பயந்து நடுங்கிட்டு இருக்கும்போது, நான் வாழ்க்கையப் பத்தின பயமில்லாம இருக்க முடியுமா?”

“நேற்று ஒரு கேம் விளையாடினோமே, ஞாபகமிருக்கா?”

“அத எப்படி என்னால மறக்க முடியும்?”

“அந்த அஞ்சு நிமிஷ நேரத்துல, எத்தன நிமிஷம் நீ உன் எதிர்காலத்தப் பத்தி பயந்த?”

“இல்ல, முழு க்கவே எனக்கு பய அனுபவமே இல்ல.”

“அப்போ, அது முடியும்னு உனக்கு நீயே நிரூபிச்சுட்டயே. இப்போ ஏன் எங்கிட்டக் கேக்கற?”


அவள் கோபுரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

நான் திரும்பவும் கேட்டேன். “ஏன் எங்கிட்டக் கேக்கற?”

அவள் இன்னமும் கோபுரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தின் முன் என் கையை இருமுறை பக்கவாட்டில் அசைத்துவிட்டு, “நான் சொன்னது கேட்டதா, என் ...”

“அங்கிள், அத நான் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியிருக்கேன்.”

“முன்னாடி எக்ஸ்பீரியன்ஸ் பண்ணலைன்னு நேத்து சொன்னயே?”

“தப்பு. இப்ப என’குத் தெரியும். நான் ஏற்கனவே ஒரு தடவை அத ... எப்போ ...”

நான் அவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் எப்போது என கண்டுபிடிப்பதற்காக தன் தலையைக் குனிந்து, தரையில் கவனத்தைக் குவித்திருந்தாள்.


சிறிது நேரம் கழித்து அவள் தன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் ஈரமாக இருந்தன.

“நான் என் கட்டில்ல உட்கார்ந்திருந்தப்ப. என் அங்கிள் முன்னாடி. நேத்து காலைல.”

நான் பதில் சொல்லவில்லை. கோபுரத்தைப் பார்த்துத் திரும்பினேன்.

“நான் யாருகிட்ட பேசிட்டிருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா, ஸார்?”

“உன் அங்கிள்ட்ட, பிரியாவோட டாட்கிட்ட.”

“எனக்கு திருப்தியா பதில் கிடைக்கிறவரைக்கும், இங்கேருந்து நாம எழுந்திருக்கப் போறதில்ல.”

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment