*அத்தியாயம் 10*
“நேத்து நைட்டு அப்பா என்ன சொன்னாரு, அங்கிள்?”
நான் ஒரு தடவை அனிதாவைப் பார்த்துவிட்டு, மிருதுவான குரலில் கேட்டேன், “அவசியம் நீ தெரிஞ்சுக்கணுமா?”
அவள் கீழே ரோட்டைப் பார்த்துக்கொண்டே பேசினாள். “நான் தெரிஞ்சுக்கலாம்னு அங்கிள் நினைச்சா.”
நாங்கள் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் வெளியே இருந்த நடைமேடையில் உட்கார்ந்திருந்தோம். கீதா எங்களுடன் வரவில்லை. தாமதமாக காலை உணவு முடித்துக்கொண்டு, நெய்வேலியிலிருந்து புறப்பட்டோம். அங்கே வந்து சேர்ந்தபோது, ஆசிரமம் மதிய உணவு இடைவேளைக்காக மூடப்பட்டிருந்தது. இருவருக்குமே பசி இல்லை. அதனால், ஆசிரமத்தின் வெளியே இருந்த நடைமேடையில் உட்கார்ந்து கொண்டோம்.
சாலையில் ஆங்காங்கே நின்றுகொண்டு மக்கள் தங்கள் மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் மரங்கள் நின்று சூரிய ஒளி புகாதபடி தடுத்து நிழல் தந்துகொண்டிருந்தன. புத்துணர்வூட்டும் காற்று வீசியது. பெரும்பாலும் குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் சாலையில் ஆங்காங்கே உலவிக்கொண்டிருந்தனர்.
நான் அனிதாவைத் திரும்பிப் பார்த்தேன். அவள் கிளிப்பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். “கார்த்திக்ட்ட என்னப் பேசச் சொன்னாரு.”
“அதுக்கு அங்கிள் என்ன சொன்னாராம்?”
“உன்னோட சம்மதம் இல்லாம கார்த்திக்ட்ட உன் அங்கிள் பேசுவாருன்னு நினைக்கிறியா?”
அவள் சாலையைப் பார்த்துத் திரும்பினாள். கண்களில் ஈரம் கசிந்திருந்ததோ?
அவள் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்த காலணி வைக்கும் இடத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
பார்வையை அங்கிருந்து அகற்றாமல், சின்னக் குரலில் பேசினாள். “அவன ரொம்ப நேசிச்சேன் ... நான் வேலைக்குப் போறது அவனுக்குப் பிடிக்கல. அவனுக்காக என் வேலைய ரிசைன் பண்ணுனேன். வெப் டிசைனிங் கோர்ஸ் ஒண்ணு பண்ணனும்னு நினைச்சேன். அவனுக்கு அதுல விருப்பம் இல்லன்னு விட்டுட்டேன். பிரைட் கலர் ஸாரி உடுத்தறது அவனுக்குப் பிடிக்கல. அவனோட இஷ்டப்படி என்னய மாத்திக்கிட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்களோட பேசறது அவனுக்குப் பிடிக்கல. அவங்களோட அரட்டையடிக்கிறதை எல்லாம் நிறுத்திக்கிட்டேன். சாப்பாடு, டிரெஸ், ஃபர்னிச்சர் ... எல்லாமே அவனுக்காக என்னோட விருப்பத்தைக் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேன். அவன்தான் என்னோட உலகம். அவன்தான் என்னோட வாழ்க்கை.”
நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் தொடர்ந்தாள்.
“நான் அவன நம்புனேன். ஆனா, அவன் என்ன ஏமாத்திட்டான். அவகிட்ட அப்டி என்ன அவன் பார்த்தான்னு தெரியல. அவ என்னவிட எந்தவிதத்தில உசத்தின்னு எனக்குத் தெரியல.”
அவள் பெருமூச்சுவிட்டாள். நான் குறுக்கிடவில்லை. அவள் தொடர்ந்தாள்.
“அவன்கிட்ட கெஞ்சிப் பாத்தேன். சண்ட போட்டுப் பாத்தேன். மிரட்டிக்கூடப் பாத்தேன். அவனத் திருத்த என்னால ஆனதெல்லாம் பண்ணிப் பாத்தேன். அவன் எதுக்கும் அடங்கல. போராடிப் போராடி ஓய்ஞ்சுபோய்ட்டேன்.”
அவள் பேசுவதை நிறுத்தினாள். சற்று நேரம் அந்த காலணி வைக்கும் இடத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். பின்னர், தன் கால்களை முக்கோணமாக சற்று உயர்த்தி, தன் கைகளால் கோர்த்துப் பிடித்துக்கொண்டு, தன் முகத்தை முழங்கால்களில் புதைத்துக்கொண்டாள். அவள் உடல் லேசாக நடுங்குவதைக் காண முடிந்தது.
நான் என்றுமே ஸித்திகளை விரும்பியதில்லை. ஆனால், எனக்கு இப்போது ஒரு ஸித்தி அவசரமாகத் தேவைப்பட்டது. அவளை ஒரு மூன்று வயது குழந்தையாக்கி என் இடது முன்கையில் தாங்கிக்கொண்டு, அவளுக்கு முழுமையான பாதுகாப்பு உணர்வு கிடைக்கும் வரையில் ஆறுதல் படுத்திவிட்டு, திரும்பவும் அவளை பழையநிலைக்குத் திரும்பும்படி செய்வதற்கு ஒரு ஸித்தி தேவைப்பட்டது.
இன்னும் அவள் உடல் சற்றே நடுங்கிக்கொண்டுதான் இருந்தது. பல மாதங்களாக அவள் அனுபவித்து வந்த வலியையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என் இதயம் உருக ஆரம்பித்திருந்தது. அவள் அழ ஆரம்பித்துவிட்டால், என் இதயம் திரும்ப முடியாத உருகுநிலையை அடைய, என் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிவதை என்னால் நிறுத்த இயலாமல் போய்விடும். அவள் தானே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டுவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், அது நடப்பதாகத் தெரியவில்லை.
“வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கிறது,” நான் பேச ஆரம்பித்தேன். அனிதா நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் கண்களைத் துடைத்துக்கொள்ள என் கர்ச்சீப்பைத் தந்தேன்.
நான் தொடர்ந்தேன். “அந்தக் காரணம் என்னன்னு நமக்கு உடனடியாத் தெரியாமப் போகலாம். ஆனா, கண்டிப்பா ஒரு காரணம் இருக்கு. நம்மோட ஆத்மாவுக்குத் தேவைப்படாத எதுவும் நம்மோட வாழ்க்கைல நடக்க முடியாது. அதுல வலி இருக்கலாம். நம்மால ஏத்துக்க முடியாம இருக்கலாம். ஆனா, நம்ம ஆத்மாவுக்கு அது தேவைப்படுது. அதனால, அது நடந்தது.”
இதற்குள் அவள் முழுமையாகத் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள். என் கர்ச்சீப்பை என்னிடம் திருப்பிக் கொடுத்தாள்.
“தொடரட்டுமா?” நான் மிருதுவான குரலில் கேட்டேன்.
அவள் தன் தலையைப் பக்கவாட்டில் இருமுறை அசைத்துவிட்டு, “எனக்குத் தெரியும். நான் ஊகிச்சுட்டேன். எங்க போனா என்னோட ஒப்புதல் தேவப்படாதோ அங்க போகணும் எனக்கு. ப்ளீஸ், அங்கிள்.”
அவள் என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல், தன் கால்களை வசதியாக குறுக்காக மடித்து, அந்த நடைமேடையில் என்னைப் பார்த்து உட்கார்ந்து, தன் கண்களை மூடிக்கொண்டாள்.
நான் என் வசதிக்காக அவளிடமிருந்து ஓரடி தள்ளி உட்கார்ந்துகொண்டு, அவளிடம் என் கவனத்தைக் குவித்தேன். ஒரே நிமிடத்தில் அவளுடைய முகத்தின் இறுக்கம் தளர்ந்து, தியானத்தில் ஆழ்ந்தாள். சாந்தமாக புத்தரைப் போல தியானத்தில் மூழ்கிவிட்டாள். சமூகத்திலிருந்து பிரிந்து, தனித்து ஆசிரமங்களில் வாழும் துறவிகள் கூட இந்த அளவுக்கு அற்புதமாக தியானம் செய்திருக்க முடியாது. அவள் தன்னைத் தானே அனுபவத்தில் உணர்ந்து அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள்.
பத்து நிமிடங்கள் கழித்து, நான் கவனத்தைக் குவிப்பதை நிறுத்தினேன். “அனிதா, கண்ணத் திற,” நான் மெதுவாகச் சொன்னேன். அவள் மிக மெதுவாகத் தன் கண்களைத் திறந்தாள். “தேங்க்ஸ், அங்கிள்.”
“இது என் கடமை.”
“என் அங்கிள் இந்த மேஜிக் எப்படி செய்றாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.
No comments:
Post a Comment